Monday, October 12, 2026

இரகசியம் - பரகசியம் (17.10.2024)


சர்வதேச உறவுகளைக் கையாளும் விடயத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் அணுகுமுறை குறித்து தீவிர ஆய்வுகள், கணக்கெடுப்புகள் சர்வதேசத் தரப்புகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ஜனாதிபதியாவதற்கு முன்னர் அதிக அளவில் சீன பக்கம் சாய்ந்திருந்த அநுரகுமார திஸநாயக்க இப்போது தமது சர்வதேச நிலைப்பாடு குறித்து வெளிப்படையான தெளிவுபடுத்தல்களை பிரதிபலிக்காத சூழலில், அவர் எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பதை அறிவதில் - முடிவு செய்வதில் - இந்தியா, அமெரிக்கா உட்பட்ட சர்வதேச தரப்புகள் தீவிர கவனமாக இருக்கின்றன எனத் தெரிகிறது.

அவர் பதவியேற்ற பின்னர் சீனா சம்பந்தமான தன்னுடைய தொடர்புப்போக்கு குறித்து எந்த வெளிப்படுத்தலையும் முன் வைக்காமல் இருக்கின்றமை சர்வதேசத் தரப்புகளினால் அவரை எடை போட முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவர் பதவியேற்ற பின்னர் உள்ளூரில் தூதுவர் மட்டத்துக்கு அப்பால் சீன உயர் அதிகாரிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. அல்லது தொடர்பாடல் கொண்டார் என்று தகவல் இல்லை.

இந்தியத் தரப்பில் வெளிவகார அமைச்சர், தூதுவர் போன்ற பலரை அவர் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்காவின் கடற்படையின் பசிபிக் பிராந்திய தளபதியோடு அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் சீனத் தரப்புடன் அவரது உயர்மட்ட தொடர்பாடல் எதுவும் வரவில்லை.

ஆக, சீனக் கப்பல் ஒன்று - அதுவும் பாய்மர பயிற்சிக் கப்பல் ஒன்று - கொழும்பு வந்து திரும்பியமையைத் தவிர, வேறு சீன தரப்புடன் ஊடாட்டம் எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அமைதி காக்கின்றார்.

இதே நேரம் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக் கடற் பிராந்தியத்துக்குள் வருவதற்கு இடமளிக்காமல், அத்தகைய கப்பல்களுக்கு அனுமதி அளிக்காத முடிவை முன்னைய ரணில் அரசு எடுத்திருந்தது. அந்தத் தடைக்கான காலகட்டம் இவ்வாண்டு இறுதியில் முடிகின்றது. அந்த விடயம் தொடர்பில் அதன் பின்னர் என்ன செய்வது என்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது சீனா தொடர்பிலான அவரது நிலைப்பாடு தெளிவாகும் என இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச தரப்புகள் காத்திருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

சீனாவுடனான தனது அரசின் ஊடாட்டம் மூலம் சர்வதேச உறவு நிலை தொடர்பில் சில தீர்மானங்களை இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டியவராக இருக்கின்றார். அதுதான் களநிலைவரம் ஆகும். 

you may also like