Sunday, October 11, 2026

இரகசியம் - பரகசியம் (12.09.2024)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை எடுத்து பத்து நாள்களுக்கு மேலாகி விட்ட போதிலும் அந்த முடிவின் அடிப்படையிலான பிரசாரத்தில் கட்சி இன்னும் முழுமூச்சாக இறங்கவில்லை.

யுத்தம் முடிவுற்ற பின்னர் 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தான் ஆதரித்த வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ ஆகியோருக்காக அப்போது தமிழ்க் கூட்டமைப்பின் கீழ் இயங்கிய தமிழரசுக் கட்சி முழுமூச்சாகப் பிரச்சாரம் செய்தது என்பது உண்மையே.

ஆனால் இப்போது கட்சி குழப்பத்தில் உள்ளது. கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிறிதரன் எம்.பி. கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக சங்கு ஊதும் பிரசாரத்தில் இறங்கி 'ஸேம் ஸைட்' கோல் அடிக்கும் முயற்சியில் இருக்கின்றார். ஆயினும், அதை ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக - வெளிப்படையாகச் செய்கின்றார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பியோ அரங்கிற்கு வராமல் - வெளியே பகிரங்கப்படுத்தாமல் - ரணில் விக்கிரமசிங்கவுடன் 'கள்ளக் காதல்' போல, அவருக்காக அம்சடக்காக பிரச்சாரக் காய் நகர்த்தல்களை முன்னெடுக்கின்றார். ஆனால் இருவர் செய்வதுமே ரணில் விக்கிரமசிங்கவைத் திருப்திப்படுத்தும் கைங்கரியம்தான் என்பது மக்களுக்கு விளங்காததல்ல.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ 'சணம் பித்தம் சணம் வாதம்' என்று பல்டி 'மூட்'டில்தான் எப்போதும் இருக்கின்றார்.

இந்தச் சீத்துவத்தில் கட்சி என்ன செய்யப் போகின்றது? சுமந்திரன் எம்.பியும், சாணக்கியன் எம். பியும் மட்டும்தான் மத்திய குழுவின் முடிவின் பிரகாரம் தத்தமது பிரதேசங்களில் தமது ஆதரவாளர்கள் மூலம் வீடுகளில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

திருகோணமலை குகதாசனும், அம்பாறை கலையரசனும் 'மதில் மேல் பூனையாக' தந்திர அரசியல் செய்கின்றனர்.

எனினும், கட்சியின் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் திகதியிட்டுக் கட்சியின் ஒவ்வொரு மாவட்டக் கிளைத் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு கட்சியின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறியத் தந்திருக்கின்றார்.

'ஜனாதிபதி தேர்தல் - 2024; மத்திய செயற்குழு தீர்மானங்கள்' என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

மேற்சொன்ன விடயம் சம்பந்தமாக பல கூட்டங்களில் ஆராய்ந்த பின் இறுதியாக கடந்த 01.09.2024 அன்று வவுனியாவில் கூடிய மத்திய செயற்குழு, பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது:-

1. தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற திரு. அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை.

2. திரு. அரியநேத்திரனை தேர்தலில் இருந்து விலகுமாறு கோருதல்.

3. ஜனாதிபதி தேர்தல் 2024 இல் திரு. சஜித் பிரேமதாஸவை எமது கட்சி ஆதரிக்கும்.

மேற்சொன்ன கட்சியின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் 14.09.2024 தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த மத்திய செயற்குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அறியத்தருகிறேன்.

- இப்படிக் கூறப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் பிரதி கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதம் கிடைத்த பின்னர் மாவட்ட மட்டத்தில் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளை அவதானிக்கவும் பின்னர் பரிசீலிக்கவும் கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

மத்திய குழுவின் முடிவை ஏற்று நடக்கும் கட்சி பிரமுகர்கள், மீறி நடக்கும் பிரமுகர்கள் குறித்து எல்லாம் தேர்தலின் பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

கட்சி நிலைப்பாட்டுக்கு அமைய தேர்தல் பிரச்சாரத்திற்கென தயாரிக்கப்படும் பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகளை கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கவும், அவை தொடர்பில் அவர்களின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

எல்லா ஆட்டங்களும் இன்னும் பத்து நாள்களில் பெறுபேறுகளுடன் முடிவுக்கு வரும். அப்போது பார்க்கலாம்.


you may also like