Friday, October 9, 2026

இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மிகச் சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சுமூகமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் நிச்சயமாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவோம். இந்தியப் பிரதமரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்கிடையிலான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. அதனால் இரு நாடுகளும் இணைந்து இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும்” என்று கூறினார்.

அதேவேளை, அமெரிக்க நிறுவனங்கள் மீது இந்தியா நீண்ட காலமாக அதிகளவிலான வரிகளை விதித்ததாகவும், அதற்கு மாறாக இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அதேபோன்ற வரிகளை விதிக்கவில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி-டேவிட்சனை குறிப்பிட்ட அவர், “ஒரு காலத்தில் அந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு இந்தியாவில் 200 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இது எனது ஆட்சிக்கு முன்பு நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வு” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்திய நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் நுழையும்போது அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு மேம்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தகத்தில் நல்ல பலன்களைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த நான்கு நாள் வர்த்தக பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்தது. இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தக் கலந்துரையாடல்கள் இருநாடுகளின் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

you may also like