Friday, October 9, 2026

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெல்வது நிச்சயம்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை


"பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அரசியல் எதுவும் பேசவில்லை. மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்தத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார்"

- இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

 "நான் கட்சியில் இருந்தபோது, அநியாயமாக நடந்த பொதுக்குழுவிலும், கட்சியினுடைய வரவு செலவு கணக்குகளை என்னை வாசிக்கவிடாமல் அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியின் பொருளாளராக சீனிவாசன் பொறுப்பேற்றதில் இருந்து அ.தி.மு.கவின் வரவு செலவு கணக்கு விவரங்களை நாங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக கேட்கப்போகிறோம். அதற்கு அவர்கள் உரிய பதிலளிக்க வேண்டும்.

திருச்சி வந்த பிரதமரை சந்திப்பதற்கு வாய்ப்புக் கேட்டிருந்தேன். பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுத்தனர். மனநிறைவோடு அதை நானும் செய்தேன். இந்தச் சந்திப்பில், அரசியல் எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்துக் கடிதத்தைக் கொடுத்தேன். வாய்ப்புகள் வரும்போது உறுதியாக டில்லிக்குச் செல்வேன்.

இந்த நிமிடம் வரை பா.ஜ.கவுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்" - என்றார். 

you may also like