Friday, October 9, 2026

கள்ளுக்கான தடையை த.வெ.க. அரசு நீக்குவதற்கு மறுப்பது கொடுஞ்செயல் - சீமான் காட்டம்


''அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம், நம் நாட்டுப் பனைத் தொழிலாளி ‘கள்’ இறக்கக் கூடாதா? கள்ளுக்கான தடையை த.வெ.க. அரசு நீக்க மறுப்பது பனை தொழிலாளர்களின் வாழ்வினை அழிக்கும் கொடுஞ்செயல்.''

- இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

''தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் த.வெ.க. அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

‘கள்’ தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்ததாகும். பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருள்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன்?

தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பது த.வெ.க. அரசுக்கு தெரியுமா? தெரியாதா? ‘கள்’ போதைப்பொருள் என்றால், அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத் தீர்த்தமா? அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி, நம் நாட்டு ‘கள்’ அல்ல; மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக் கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் த.வெ.க. அரசு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா? அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத் தொழிலாளி ‘கள்’ இறக்கக் கூடாதா?

‘கள்’ உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையை கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தடைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது வெட்கக்கேடானது. உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையையும், தரத்தையும் ஒழுங்குபடுத்த முடிகிற அரசால், ‘கள்’ உற்பத்தியை மட்டும் உரிய உரிமம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டுவர முடியாதா?

கலப்படம் நடைபெறுகிறது, சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது என்றால் அவற்றை அரசு தடுக்க வேண்டும். அதற்கு மாறாக, கள்ளுக்கு தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது கொடுங்கோன்மை இல்லையா?

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக அரசால் மலிவு விலையில் மது விற்க முடியுமென்றால், கலப்படக் கள்ளை தடுக்க, அரசால் தூய கள்ளை விற்க முடியாதா? கள்ளுக்குத் தடையை நீக்காமல், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று த.வெ.க. அரசு கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.'' குறிப்பிட்டுள்ளார்.


you may also like