Saturday, October 10, 2026

அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை செய்த நிறுவனம்


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 லட்சம் இந்திய ரூபா அபராதம் விதித்துள்ளது.

'சந்து டிரேடிங் கம்பனி' எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீகாரி பிரதர்ஸ்' என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா உள்ளிட்ட இனிப்புகளின் விபரக் குறிப்புகளில் 'அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்' என்றும், 'ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம்' என்றும் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனை உண்மை என நம்பி ஏராளமான நுகர்வோர்கள் கொள்வனவு கட்டளை செய்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இவை எதுவும் உண்மையான கோவில் பிரசாதங்கள் அல்ல என்பது விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அமேசன் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளதோடு, "நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே எனக் கூறிக்கொண்டு இவ்வாறான தவறான விற்பனைப் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது" எனவும் அமேசன் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு' அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like