Sunday, October 11, 2026

இரகசியம் - பரகசியம் (11.02.2026)


மாகாண சபைகளின் வழமையான நடவடிக்கைகளில் மத்திய அரசின் பிரதிநிதிகள் முறையற்ற விதத்தில் தலையிடுவதற்கான ஏற்பாடுகளை - வசதிகளை - வடக்கு ஆளுநர் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, முறையற்ற விதத்தில் செய்கிறார் என்பதை நேற்று எனது பத்தியில் கோடி காட்டி இருந்தேன்.

அது குறித்து பல தரப்புகளில் இருந்தும் விசாரணைகள், ஆராய்வுகள், தேடல்கள் தொடங்கி இருக்கின்றன எனத் தெரிகின்றது.

மாகாண சபை விடயங்களில் அதிகம் பரிச்சயம் உள்ள அரசியல்வாதி ஒருவர் பேசினார். மாகாண சபை விவகாரங்களில் மத்திய அரசுக்கோ, மத்திய அரசின் அரசியல் பிரதிநிதிகளுக்கோ நேரடியாகத் தலையிடுவதற்கான எந்த இடமும் இல்லை, ஆக இணைப்புக் குழுக் கூட்டங்களில் மட்டுமே அவர்கள் இணைப்பு நடவடிக்கைகளுக்காகப் பங்கு பற்ற முடியும் என்பதுதான் சட்டம் மற்றும் ஒழுக்கக் கோவைகளின் படி சாத்தியமானது என்றார் அவர்.

மாகாண சபையின் உள் நடவடிக்கைக் கூட்டங்களுக்கு மத்திய அரசின் அரசியல் தலைவர்கள் பிரசன்னம் கூடக் கொடுக்க முடியாது என்பது அவரது நிலைப்பாடாகும். இது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் பற்றி அவர் ஆராய்கின்றார் எனத் தெரிகின்றது.

வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சு தொடர்பான ஆராய்வுக் கூட்டம் நேற்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. ஆளுநருக்கு அடுத்த நிலையில அந்த மாகாண அமைச்சுக்குப் பொறுப்பானவர் போல நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஸ்ரீ பவானந்தராஜா அமர்ந்திருந்தார். அதனை உறுதிப்படுத்துவதற்கான படத்தை இத்துடன் இணைத்து உள்ளேன்.

மாகாண சபையின் உள் கூட்டம் ஒன்றில் மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்தப் பதவி நிலையின் அடிப்படையில் பங்கு பற்றுவதற்கு இடமே இல்லை என்று குறிப்பிட்ட மேற்படி அரசியல்வாதி, இது தொடர்பில் பகிரங்க அறிக்கை வெளியிடவும், நிலைமையைத் தெளிவுபடுத்தவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கையை நாடவும் விடயங்களைக் கையாளத் தொடங்கியிருகின்றார் என அறிந்து கொண்டேன்.

வடக்கு ஆளுநர் தமக்கு கீழ் உள்ள மாகாண அமைச்சின் சுகாதார அமைச்சு விவகாரத்தை ஆளும் தரப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ஸ்ரீ பவானந்தராஜாவிடம் ஒப்படைத்துள்ளார் என்பதையும் நேற்றுக் குறிப்பிட்டு இருந்தேன்.

ஆக, மாகாண சுகாதார அமைச்சின் கூட்டத்தில் வடக்கு ஆளுநரால் மாகாண சுகாதார அமைச்சர் என்ற தோரணையில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய தொனியை நீங்கள் படத்தில் காண முடியும்.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

எமது பத்திரிகையையோ அல்லது எனது பத்திச் செய்தியையையோ அவர் குறிப்பிடாவிட்டாலும், ''பத்திரிகை தவறான கருத்தைப் பிரசுரிக்கின்றது. எனது நோக்கம் அபிவிருத்தியே அன்றி அரசியல் அல்ல'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் நேற்று எனது அரசியல் பத்தியில் ஆளுநர் அரசியல் செய்கின்றார் என்றோ அல்லது தமது அரசியல் நோக்கத்தைச் செயற்படுத்துகின்றார் என்றோ குறிப்பிடவில்லை. அவர் (ஆளுநர்) ஆட்சியாளர்களின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு முறையற்ற வேலைகளை செய்கின்றார் என்ற கருத்தையே வலியுறுத்தி இருந்தேன். இப்போதும் இன்றும் அதையே சொல்லுகின்றேன். ஆளுநர் அரசியல் செய்யவில்லை, ஆனால் அரசியல் அழுத்தத்திற்கு முறையற்ற விதத்தில் அடி பணிந்து தவறான விடயங்களைச் செய்கின்றார் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

you may also like