- by Editor
- 6 months ago
இரகசியம் - பரகசியம் (09.02.2024)
கடந்த மாத இறுதியில் இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்க்க்ரமசிங்க ஆரம்பித்து வைத்து, தமது அரசின் கொள்கை விளக்கம் பற்றிய கருத்துக்களை அக்கிராசனப் பேச்சை - சிம்மாசன உரையை - நிகழ்த்தி இருக்கின்றார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்றி ஒன்றரை வருடங்களுக்குள் இப்படி நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் உயர் பீடத்தில் இருந்தபடி மூன்றாவது தடவைக்கு மேல் ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தி விட்டார்.
இப்படி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி இடைநிறுத்துகின்றமைக்கு (Prorogue) பல காரணங்கள் - கற்பிதங்கள் - கூறப்படுகின்றன.
ஒவ்வொரு தடவையும் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் போது அதுவரை செயற்பட்டுக் கொண்டிருந்த 'கோப்', 'கோபா' போன்ற நாடாளுமன்ற நிலையியல் குழுக்கள் செயலிழந்து விடும். மீண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானதும், புதிய நிலையில் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் பணிகள் புதிதாக ஆரம்பிக்கப்படும்.
அரச நிறுவனங்கள், அமைப்புகள், அமைச்சுக்கள் போன்றவற்றின் செயற்பாடுகள், நிதிக் கையாளுகைகள் போன்றவற்றை விசாரிக்கும் மேற்படி குழுக்கள் சில ஊழல், முறைகேடுகள் போன்ற விடயங்களைத் துருவித் துருவித் தேடி, விடயம் பகிரங்கமாகும் சூழ்நிலை வருகையில் இப்படி நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி விடுகின்றமையால் அந்த நிலையில் குழுக்களும் செயலிழந்து போய்விடுகின்றன. பின்னர் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும் புதிய குழுக்கள், அவற்றுக்குப் புதிய உறுப்பினர்கள், புதிய தலைவர்கள் என்று அக்குழுக்கள் எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டி இருக்கும். அவையும் கணிசமாக முன்னேறி, விவகாரங்கள் வெளியே வரப் போகின்றன என்றதும் மீண்டும் ஒரு நாடாளுமன்ற இடைநிறுத்தம் வந்துவிடும். மீண்டும் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து விடயத்தை தொடங்க வேண்டி இருக்கும்.
இந்த எண்ணத்தில்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களை இடைநிறுத்தம் முடிவுகள் அவ்வப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படுகின்றன என்ற கருத்து தாராளமாக உண்டு. அது பெரும்பாலும் சரியானதும் கூட.
தனக்கு அதிகாரத்தைத் தாரைவார்த்த ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடிகள், குழப்படிகள் பற்றிய விவரங்கள் நாடாளுமன்றக் குழுக்களின் விசாரணைகளின் மூலம் அம்பலமாக அனுமதித்தால் தாம் தமது அரசை தொடர்ந்து கொண்டு நடத்த ராஜபக்ஷக்கள் விட மாட்டார்கள் என்ற அச்சத்திலும், ஜனாதிபதி பதவியை தனக்குத் தாரை வார்த்து அன்பளித்த ராஜபக்ஷகளுக்கு நன்றி விசுவாசத்தை காட்டும் விதத்திலும் இப்படி நாடாளுமன்றத்தை அடிக்கடி இடை நிறுத்திவைத்து நிலையியல் குழுக்களின் தொடர்ச்சியான விசாரணைகளை தடுத்து வருகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ற கருத்து உள்ளது. அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.
இப்படி நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைநிறுவிறுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணத்தை சுமந்திரன் எம்.பி. நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கின்றார்.
''தன்னுடைய குறுகிய கால ஜனாதிபதிப் பதவியில் இப்படி நாடாளுமன்றத்தை இடை நிறுத்தி வைப்பதை பல தடவைகள் செய்து, அதனை ஒரு முறைமையாகவே அவர் கொண்டு வந்து விட்டார்.
இப்படி ஒவ்வொரு முறையும் அவர் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்யும்போது ஏன் அப்படி அவர் இடைநிறுத்துகின்றார் என்று பலரும் ஆச்சரியப்பட்டதும் உண்டு.
அப்படி சிம்மாசன பிரசங்கம் செய்வதில் ரணிலுக்கு ரொம்ப - கொள்ளை - ஆசை. அடிக்கடி, செய்யக்கூடிய தடவைகள், அதனைச் செய்ய அவர் முற்படுகின்றார். அந்த அக்கிராசன ஆசனத்தில் இருந்து கம்பீரமாக உரையாற்ற அவருக்கு அதிகம் விருப்பம். கடந்த பல தசாப்தங்களாக மக்களுக்கும் நாடாளுமன்றுக்கும் தான் கூற விரும்பியவற்றை இப்போது கிடைத்த குறுகிய காலத்தில், பல தடவைகள் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி, அதன் மூலம் ஆரம்ப வைபவத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தாம் விரும்பியவற்றைக் கூற அவர் முற்படுகின்றார்.
இது இப்போது எங்களுக்கு உறுதியாகத் தெளிவாகி வருகிறது.
''அப்படி அவர் உரையாற்றி தமக்குத்தாமே மகிழ்வடையும் நேரத்தில் நாட்டில் மக்களும் நாடும் பொருளாதாரத் தொடர்பில் பெரும் குழப்பத்தில் - சிக்கலில் - மாட்டி முழித்துக் கொண்டு நிற்கின்றனர்'' - என்றார் சுமந்திரன்.
ஆக, ஜனாதிபதி அடிக்கடி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அமர்வை இடைநிறுத்துவதின் பின்னால் இத்தகைய பல சூத்திரங்கள் புதைந்து கிடக்கின்றன.