Saturday, October 3, 2026

இரகசியம் - பரகசியம் (18.11.2023)


நாட்டின் அரசமைப்புக் கவுன்ஸில் மீண்டும் ஒரு நெருக்கடியை - குழப்பத்தை - சந்திக்கின்றது.

உயர்நீதிமன்றத்தில் மதிக்கப்பட்ட ஒரு நீதியரசரான புவனேக அலுவிகார தற்போது ஓய்வில் சென்றுள்ளார்.

அந்த இடத்துக்கு ஒரு நீதியரசர் நியமனம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரையை ஆலோசித்து, அங்கீகரிப்பது அரசமைப்புக் கவுன்ஸிலின் பொறுப்பு.

வழமையாக, உயர்நீதிமன்றத்தில் ஓரிடம் வெற்றிடமாகும் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிரேஷ்ட நிலையில் இருக்கும் நீதியரசரை அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிஸிற்றர் ஜெனரல் பதவி தரத்தில் இருப்பவரை அல்லது சட்டத்துறையில் சிரேஷ்ட உயர் நிலையில் சட்டத்தரணியாகப் பிரகாசிக்கும் ஒருவரை ஜனாதிபதி பரிந்துரைப்பார். அந்தப் பெயரை அரசமைப்புக் கவுன்ஸில் அங்கீகரிக்கும். அது வழமை.

அதேபோல, தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக இருக்கும் நிஸங்க பந்துல கருணாரட்ணவின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்திருக்கின்றமைதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போன வாரம் வெள்ளிக்கிழமை இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, இலங்கைக் கிரிக்கெட்டை நிர்வகிக்க விளையாட்டுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரட்ண குறித்து நாடாளுமன்றத்தில் பிய்த்து உதறப்பட்டது. அவரின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மோசமாக விமர்சிக்கப்பட்டன.

அவரின் பெயரையே இப்போது உயர்நீதிமன்ற நீதியரசர் வெற்றிடத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்திருக்கின்றமை அரசமைப்புக் கவுன்ஸிலின் அங்கத்தவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகின்றது.

வழமையாக இத்தகைய பரிந்துரையுடன் சம்பந்தப்பட்ட நபர் தொடர்பில் பிரதம நீதியரசரின் நற்சான்றுக் கடிதமும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரட்ண விடயத்தில் ஜனாதிபதியின் பரிந்துரையோடு பிரதம நீதியரசரின் பரிந்துரை காணப்படவில்லை. ஆகவே, இந்த நியமனம் தொடர்பில் பிரதம நீதியரசரின் கருத்தை அறிய அரசமைப்புக் கவுன்ஸில் நேற்றுத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது.

அது தொடர்பில் பிரதம நீதியரசரின் கருத்தைக் கோரும் கடிதம் ஒன்றை அரசமைப்பு கவுன்ஸிலின் தலைவரான சபாநாயகர் நேற்றே பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைத்தார் என அறிய வந்தது.

அவரின் பதிலைப் பெற்று, அதன் பின் இன்று மீண்டும் கூடி ஆராய்ந்து, ஒரு முடிவை அரசமைப்புக் கவுன்ஸில் எடுக்கும் என்று தெரிகின்றது.

ஜனாதிபதியின் இந்தப் பரிந்துரையை நிராகரித்து, புதிய பிறிதொரு பரிந்துரையைத் தருமாறு கோரும் முடிவை அரசமைப்புக் கவுன்ஸில் இன்று எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதுதான் நிலைமை. 

you may also like