Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (02.03.2025)


பாவம் இலங்கைப் பொலிஸார்..! உலகில் வேறு எந்த நாட்டின் பொலிஸ் துறையினருக்கும் ஏற்படாத நெருக்கடி அவர்களுக்கு.

வழக்கமாக சந்தேகத்திற்குரியவர்களை அல்லது குற்றம் இழைத்தவர்களை பொலிஸ் துறை தேடும். ஆனால் இங்கு இலங்கை பொலிஸார் தங்களின் பொலிஸ் துறை தலைவரையே - பொலிஸ்மா அதிபரையே - தேட வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையின் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டு பதவியேற்றவர் தேசபந்து தென்னக்கோன்.

அவரது நியமனம் தவறானது எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், விசாரணை முடிவடையும் வரை தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்வதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. அதனால் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க முடியாத நிலையில் தேசபந்து தென்னக்கோன் இருந்தார். அவரது இடத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரே இப்போது பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் முன்னர் பியகமவில் ஹோட்டேல் ஒன்றில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சட்ட விரோத சோதனை நடவடிக்கையின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை காணவில்லை என்றும், அவரைத் தாங்கள் தேடி வருகின்றனர் என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியமையை அடுத்து தேசபந்து தென்னக்கோன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எதிராக மாத்தறை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஆக, இலங்கையின் பொலிஸ் திணைக்களம் பொலிஸ்மா அதிபரையே காணவில்லை என்று நீதிமன்றுக்கு கைவிரிக்கும் நிலையில்தான் பொலிஸ் துறையின் சீத்துவம் இருக்கின்றது.

+++++++++

வரும் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படும் ஒன்பது கட்சிகள் அடங்கிய புதிய கூட்டில் நீதியரசர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி பெரும்பாலும் இடம்பெறாது என இப்பத்தியில் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டி வந்தேன். இப்போது கட்சியின் பிரமுகர் மணிவண்ணன் தமது கட்சியினர் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தங்கள் கட்சியின் மான் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்று தமது முகப்புத்தகம் மூலம் அறிவித்திருக்கிறார். அதன் அர்த்தம் தங்கள் சின்னமல்லாத வேறு கூட்டணியில் தாங்கள் இம்முறை தேர்தலை எதிர்கொள்ளப் போவதில்லை என்பதுதான்.

ஏற்கனவே மேற்படி சங்கு சின்னக் கூட்டணியிலிருந்து ஐங்கரன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விலகி விட்டது என்பது தெரிந்ததே.

++++++++++++++++++

வேலியே பயிரை மேயும் கதைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதுவும் அந்த வரிசையில் ஒரு தகவல்தான்.

திருகோணமலை நகரத்தில் திருகோணமலை பொலிஸ் நிலையத்திலும், அருகில் உப்புவெளி பொலிஸ் நிலையத்திலும் பணியாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களின் நடத்தைகள், செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட மேலதிகாரிகள் அவர்கள் போதை வஸ்து உட்கொண்டிருக்கலாமென சந்தேகம் கொண்டு அவர்களை உரிய மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு நரஹன்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். மூவரையும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் திருகோணமலை ரயில் நிலையத்துக்குக் கூட்டிட்டு சென்று அவர்களுக்கான கொழும்பு ரயில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென அங்கிருந்த. நழுவித் தலைமறைவாகினர் எனக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் பின்னர் திருகோணமலை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மூவரையும் உடனடியாக சேவையிலிருந்து இடைநிறுத்தி விசாரணைகளைத் தொடர மேலதிகாரிகள் முடிவு எடுத்திருக்கின்றனர் எனத் தெரிகின்றது.

++++++++++++++++++

இலங்கை விமானப்படைக்கு ஆள் சேர்ப்புச் செய்வதற்கான விளம்பரம் யாழ்ப்பாணத்தில் தமிழில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

படையினரின் எண்ணிக்கை 2030 இற்குள் குறைக்கப்படும் எனவும், இராணுவத்தினர் ஒரு லட்சமாகவும், கடற்படையினர் 40 ஆயிரமாகவும், விமானப் படையினர் 18 ஆயிரமாகவும் குறைக்கப்படுவர் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாத உரையின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம் தற்போது நாட்டில் 3 லட்சத்து 17 ஆயிரம் படையினர் உள்ளனர் எனத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் தற்போது விமானப் படையில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் என்று கூறப்படுகின்றது. அதை அடுத்த 4 வருடங்களில் 18 ஆயிரமாகக் குறைக்கப் போகின்றார் என்கிறார் ஜனாதிபதி. ஆனால் மறுபுறத்தில் அப்படைக்கு ஆள்திரட்டும் கைங்கரியம் மும்முரமாக நடக்கின்றது.

அந்த வரிசையில் விமானப்படைக்கு ஆள் சேர்க்க யாழ்ப்பாணத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

you may also like