Sunday, October 11, 2026

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ,பி வலயங்களில் துரித அபிவிருத்தி: ஜனாதிபதி உறுதி


நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ, பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

இந்த நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காதெனவும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை பெற முடியாமல் போயிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82 ஆவது ஜனன தின நிகழ்வில் நேற்று கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திசாநாயக்கவின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காமினி திசாநாயக்கவின் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அன்னாரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும் என்றும் கூறினார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காமினி திசாநாயக்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். 

you may also like