Wednesday, October 7, 2026

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘மெலோடி’ சொக்லெட் பரிசளித்தார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்


இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சொக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,

“இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கே விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும், தொழிலாளர்களும், சிறு வணிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அங்கே பிரதமர் மோடி சிரித்துக் கொண்டு ரீல்ஸ் எடுக்கிறார். பாஜகவினர் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இது தலைமைப் பண்பு அல்ல. மாறாக அதை கேலிக்கூத்தாக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.

ரோம் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று புதன்கிழமை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பின்போது, மெலோனிக்கு ‘மெலோடி’ சொக்லெட் பரிசு அளித்தார்.

இந்த பரிசைப் பார்த்த மெலோனி, மிகுந்த உற்சாகம் அடைந்ததோடு, அந்த பரிசு பெற்ற தருணத்தை விடியோவாகப் பதிவு செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததோடு, பரிசளித்த பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து கிளம்பும்போது, அவர் ஒரு பக்கெட் மெலோடி சாக்லேட் வாங்கிச் சென்றிருக்கிறார். அதனை மெலோனிக்கு பரிசாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இது அந்த காணொலியில் பதிவாகியிருக்கிறது.

இந்த காணொலியில், இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரிசை வாங்கி வந்துள்ளார். அது மிக ருசியான சொக்லெட் - மெலோடி என்று கூறி புன்னகைக்கிறார். அப்போது, அந்த சொக்லெட் பக்கெட்டை பிரதமர் மோடி காணொலியில் காண்பிக்கிறார். இருவரும் இணைந்து மெலோடி என்று கூறி சிரிக்கிறார்கள்.


you may also like