Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (21.09.2024)


இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் சூனியமாக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பன்றி சுமுகமான முறையில் தேர்தலை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான். ஓரிடத்தில் நடந்த வாக்களிப்பு குழம்பி, அங்கு மீண்டும் புதிதாக ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்துவதாயின், அதுவரை ஒட்டுமொத்த தேர்தலின் முடிவை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும். அப்படி அல்லாமல், அதுவரையான முடிவை வெளியிட்டால், மீண்டும் வாக்களிப்பு நடைபெறும் இடத்தில் அந்த முடிவுகள் வாக்களிப்பைப் பாதிக்கும்.

ஆகவே ஏதேனும் வாக்களிப்பு நிலையங்களில் மீளத் தேர்தல் நடத்தும் நிலைமை ஏற்பட்டால், வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளும் பணியையும் அதுவரை நிறுத்த வேண்டி நேரும் என்று கூறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆயினும் இதனைக் குறிப்பிடும்போது எனக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.

1981 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்தான் அது. அந்தத் தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து யாழ் நூலக எரிப்பு வரை இடம்பெற்ற பல சம்பவங்களும் பலரும் அறிந்தவைதான்.

அந்தத் தேர்தல் வாக்களிப்பை ஒட்டி இடம்பெற்ற களேபரத்தில் நான்கு, ஐந்து வாக்குப் பெட்டிகள் அளிக்கப்பட்ட வாக்குகளுடன் காணாமல் போயின. அவை எங்கு என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அந்த இடங்களில் மீளத் தேர்தல் நடத்தப்படாமல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதற்கு ஒரு காரணமும் கூறப்பட்டது. காணாமல் போன நான்கு, ஐந்து வாக்குப் பெட்டிகளிலுமே இருந்திருக்கக் கூடிய வாக்குகளை, தேர்தலில் போட்டியிட்ட ஏதேனும் ஒரு தரப்புக்கு முழுமையாக சேர்த்தால் கூட, தேர்தல் முடிவுகளில் மாற்றம் வராது என்ற காரணத்தை நியாயமாக - விளக்கமாக - அப்போது கூறினார்கள்.

அது சரி எனின், இப்போது குழப்பம் ஏற்பட்டு, இடைநிறுத்தப்படக்கூடிய சில வாக்களிப்பு நிலையங்களில், கடைசியில் வரக்கூடிய பெறுபேறு, ஒட்டு மொத்தத் தேர்தலின் முடிவை மாற்றாது என்றால், அந்த இடங்களில் மறுவாக்களிப்பை நடத்தாமலேயே இறுதி முடிவுகளை வெளியிடுவார்களா?

தெரியவில்லை. தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும்.

you may also like