- by Editor
- 2 years ago
அமெரிக்கா செல்லத் திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு
-
- by Editor,
- 1 day ago
- in இலங்கை செய்திகள்
அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் பயணத்தின்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகள், பயணத் தடங்கல்கள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளைச் சமாளிப்பதற்குப் போதுமான நிதி வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், விசா நேர்காணலுக்குச் சிறந்த முறையில் தயாராகிச் செல்லுமாறும், அமெரிக்காவிற்குள் நுழைந்த பின்னர் அந்நாட்டு அரசாங்கத்தின் பொது நலன்புரி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் உண்மையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் தொடர்பில் கடும் எச்சரிக்கை
அமெரிக்க விசாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என அமெரிக்கத் தூதரகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது பாரிய மோசடியாகக் கருதப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தூதரகம், இவ்வாறான செயல்களால் தற்போதைய விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாவையும் இழக்க நேரிடலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், மோசடி தொடர்பான காரணங்களால் எதிர்காலத்தில் அமெரிக்க விசாவைப் பெறுவதற்கும் நிரந்தரத் தகுதியின்மை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் தமது நிதி நிலைமைக்கான ஆதாரங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சரியாகத் தயார்படுத்தி, உண்மையான தகவல்களை மட்டுமே விசா விண்ணப்பத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.