Sunday, October 11, 2026

27, 28 ஆம் திகதிகளில் யாழ். சட்ட மாநாடு!


யாழ்ப்பாணம் சட்ட மாநாடு எதிர்வரும் 27இ 28 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாநாட்டு ஒழுங்கமைப்புக் குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சட்டமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர் கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்லாக யாழ்ப்பாணத்தில் சட்ட மாநாடு ஒன்றை நடத்த விரும்பியது. அதற்கமைய இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இம்மாதம் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாணம் சட்ட மாநாடு என்னும் பெயரிலான மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சட்ட மாநாடானது நெருக்கடிகளுக்கூடான வழிகள் என்னும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் நோக்கங்களாகச் சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல்இ எழுத்திலுள்ள சட்டத்துக்கும் அதன் செயற்பாட்டுக்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்குச் சட்டத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் மாண்புமிகு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணமும், கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமிவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதல் நாள் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக இலங்கையின் புகழ்பூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோரின் திறப்புரைகள் இடம்பெறவுள்ளன.

'இலங்கையில் பகிரங்க சட்டத்தின் எதிர்காலம்: நெருக்கடிகளும் சவால்களும்' என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு யசந்த கோதாகொட பிரதம விருந்தினராகவும், அரசமைப்புச் ச ட்ட நிபுணர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

இரண்டாம் நாள் நிகழ்வின் சிறப்பம்சமாக அமெரிக்காவின் யாலே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் துணைப் பேராசிரியர் திரு ரோஹித் டேவும், சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி வினோத் சுரனாவும் திறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.

அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மேலெழுவதற்கான சட்டத்தின் வகிபாகம் என்னும் தலைப்பிலான கலந்துரையாடலானது இரண்டாம் நாளின் மறறொரு சிறப்பு நிகழ்வாகும்.

மாநாட்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுவுக் கட்டுரைச் சுருக்கங்கள் இரண்டு நாள் அமர்வின் போதும் ஆய்வாளர்களால் வாசிக்கப்படவுள்ளமையும் யாழ்ப்பாணம் சட்ட மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

சமகாலப் பிரச்சினைகளினை முன்னிறுத்தியதாக பல்வேறு சட்ட விடயங்களை ஆராய்ந்து அதனூடாக இலங்கையின் வடபிராந்தியத்தின் பொருளாதார, சமூக விடயங்களை வினைத்திறனாக அணுகும் தன்மையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சட்ட மாநாட்டில் பங்குபற்றிப் பங்காளிக்குமாறு ஆர்வமுள்ளோர் அனைவரையும் பணிவன்புடன் அழைத்து நிற்கின்றோம். - என்றுள்ளது.

you may also like