- by Editor
- 2 years ago
2026 முதல் அரையாண்டில் அரசுக்கு ரூ.9.5 பில்லியன் உபரி - வருமானம் 27% உயர்வு
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஜனவரி - ஜூன் அரச நிதி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு உபரி பதிவாகக் காரணமாக அரசாங்க வருமானம் 27 சதவீதம் அதிகரித்ததுடன், அரசாங்கச் செலவினங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டமையும் முக்கிய காரணங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 2.71 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீத வளர்ச்சியாகும். ஆண்டிற்கான 4.91 டிரில்லியன் ரூபா வரி வருமான இலக்கில், முதல் ஆறு மாதங்களிலேயே 55.2 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளது.
வரி வருமானத்தில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளது. சுங்கத்தின் மூலம் 1,290 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன், இது மொத்த வரி வருமானத்தின் 48 சதவீதமாகும். அடுத்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,248 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதுடன், அது மொத்த வரி வருமானத்தின் 46 சதவீதமாக பதிவாகியுள்ளது. மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருமான மூலங்களிலிருந்து 35 பில்லியன் ரூபா திரட்டப்பட்டுள்ளது.
சுங்க வருமானத்தில் அதிக பங்களிப்பை இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) வழங்கியுள்ளது. இதன் மூலம் 443.7 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத உயர்வாகும்.
மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வரி வருமானம் 129.1 பில்லியன் ரூபாவிலிருந்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்து, 106.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சுங்கத்தினால் திரட்டப்பட்ட மொத்த வரி வருமானத்தில் 63 சதவீதம் மோட்டார் வாகன இறக்குமதி தொடர்பான வரிகளில் இருந்தே கிடைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தில் வருமான வரியே அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் 568.4 பில்லியன் ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத உயர்வாகும். நிறுவன வருமான வரி 26 சதவீதமும், தனிநபர் வருமான வரி 15 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதேவேளை, உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீதான VAT வருமானம் 26 சதவீதமும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 15 சதவீதமும் உயர்ந்துள்ளன.
மதுவரித் திணைக்களத்தின் மதுபானங்கள் மீதான மதுவரி வருமானமும் 27 சதவீதம் அதிகரித்து 137.5 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
வரி அல்லாத வருமானம் 43.6 சதவீதம் அதிகரித்து 243.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, மொத்த அரசாங்கச் செலவினம் 7.9 சதவீதம் அதிகரித்து சுமார் 2.95 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
மீளுறும் செலவினங்கள் 6.5 சதவீதமும், மூலதனச் செலவினங்கள் 23.6 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில், வட்டிச் செலுத்தல்கள் 2 சதவீதம் குறைந்து 1,234.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளன.
அதேநேரத்தில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 4.7 சதவீத வளர்ச்சியை விட அதிகமானதாகும் என்றும் அரச நிதி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.