Saturday, October 10, 2026

157 சிறிய பாடசாலைகளை மூட ஜனாதிபதி திட்டம்? இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு


இலங்கையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக மேற்கொள்ளப்படும் மேலதிகக் கல்வியை பயன்படுத்தி அவர்களிடம் பணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு முறையான அங்கீகாரம் பெற்றதும் தகுதியானதுமான மேலதிகக் கல்வி வாய்ப்புகளை அரசாங்கம் போதியளவில் வழங்காததால், பல ஆசிரியர்கள் இவ்வாறான நிறுவனங்களை நம்பி ஏமாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்காக கல்வி டிப்ளோமா உள்ளிட்ட பல்வேறு மேலதிக கற்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், முறையான அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்படும் சான்றிதழ்களை கல்வி அமைச்சு ஏற்க மறுப்பதால், ஆசிரியர்களின் பணமும் உழைப்பும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஆசிரியர்களிடம் தவறான முறையில் பணம் அறவிடும் அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிய பாடசாலைகளை மூடும் திட்டத்திற்கும் எதிர்ப்பு

இதேவேளை, நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவாகக் கல்வி கற்கும் சுமார் 157 சிறிய பாடசாலைகளை மூடுவது தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சிறிய பாடசாலைகளை பராமரிப்பதும் அவற்றுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் பயனற்றது என அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், அவற்றை மூடி மாணவர்களை பெரிய பாடசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் தேவையான கல்வி வசதிகளை வழங்க முடியும் என்ற வாதம் முற்றிலும் தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய பாடசாலைகளை மூடும் நடவடிக்கை, கல்வி வாய்ப்பு என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைப்பாட்டை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், சிறிய பாடசாலைகளை மூடுவதற்குப் பதிலாக அவற்றின் வளங்களையும் கல்வித் தரத்தையும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

you may also like