Sunday, October 11, 2026

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த ஜப்பானிய தூதுக்குழு விஜயம்


இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பானியத் தூதுக்குழுவினர் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான 'கொனைசன்ஸ் டி சிலோன்' நிறுவனத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேத சிகிச்சை முறைகள், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொள்வதே இத்தூதுக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறை உறவுகளை வலுப்படுத்துவதுடன், தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.

குறிப்பாக, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கையை ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாகப் பிரபல்யப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, இலங்கையின் தனித்துவமான கலாசார மரபுகளை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்வது தொடர்பான விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்துக்கு மேலதிகமாக, இத்தூதுக்குழுவினர் சப்புகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உட்படப் பல முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like