- by Editor
- 5 days ago
இரகசியம் - பரகசியம் (19.02.2024)
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதராக இதுவரைப் பணியாற்றிய ராகேஷ் நடராஜ் தமது பணிக்காலத்தை முடித்துக் கொண்டு அடுத்த வாரத்தில் புதுடில்லி திரும்புகின்றார். அதை ஒட்டிய பிரியாவிடை நிகழ்வு நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும் கூட அந்நிகழ்விற்கு வந்திருந்தனர். இடையில் இருவரும் சந்தித்து இரண்டோரு விடயங்களை மட்டும் பேசிக் கொண்டனர். அப்போது அருகில் என் நண்பர் ஒருவர் இருந்தார். நானும் சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்தேன்.
''நீங்கள் யாழ்ப்பாணத்தில்தான் நிற்கின்றீர்களா?'' - என்ற சாரப்பட சுமந்திரனிடம் கேட்டாராம் மாவை.
''ஆம். இரண்டு,மூன்று தினங்களாக நிற்கிறேன். நாளை யாழ்ப்பாணத்தில் சில வழக்குகள் இருக்கின்றன. அவற்றை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்புகிறேன்!'' - என்று பதில் அளித்தாராம் சுமந்திரன்.
ஆக, நீண்ட நாள்களுக்குப் பின்னர் இருவரும் நேரில் ஆளையாள் கண்டு கொண்டனர். பேசிக் கொண்டனர். ஆனால் தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து ஒரு வசனம் கூட சுமந்திரனுடன் மாவை பேசவே இல்லை எனத் தெரிகின்றது.
தமிழரசு தொடர்பான அனைத்து வழக்குகளுக்குமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 'சுமா', 'சுமா' என்று சுமந்திரனுக்குப் பின்னால் அலைந்த மாவை, இப்போது சுமந்திரனை அந்நியனாகப் பார்க்கும் நிலைமை. தமிழரசுக்கு எதிரான தற்போதைய வழக்குகளுக்கு சுமந்திரன்தான் பின்னணி என்ற சிறீதரன் அணியின் நிலைப்பாட்டை மாவையும் விழுங்கி கொண்டு விட்டார் என்பதுதான் இதன் அர்த்தம். பாவம் சுமந்திரன்...!
கட்சி அழைத்தால் இந்த வழக்குகளில் கட்சிக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதாடுவேன் என்ற சுமந்திரனின் அறிவிப்பை மாவையரும் நம்பவில்லை என்றுதான் புரிகின்றது.
இந்த விடயத்தை ஒட்டி இன்னொரு சம்பவம். மூன்று நாள்களுக்கு முன்னர் பிறிதொரு ஹோட்டலில் நடந்தது. யாழ். வந்திருந்த இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா வடக்கின் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்திக்கும் நிகழ்வு அது.
ஒரு வட்டமேசையில் சுமந்திரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் என மூன்று எம்.பிக்கள் மற்றும் சிலருடன் நானும் அமர்ந்திருந்தேன். பொது விடயங்கள் பற்றி பேசினோம்.
அப்போது கஜேந்திரகுமாரின் கட்சி அலுவலகம் குறித்துப் பேச்சு வந்தது. அங்கு தமது கட்சித் தலைவர்களின் படங்கள் எதுவும் தொங்கவிடப்படவில்லை என்றார் கஜேந்திரகுமார்.
''கட்சித் தலைவர் என்ற முறையில் உங்கள் படம் கூட இல்லையா?'' - என்று ஒருவர் கேட்டார்.
''இல்லை.இல்லை'' - என்று பதிலளித்த அவர் இன்னொரு விடயத்தையும் சொன்னார்.
''எனது படத்தை வைக்கக் கேட்டார்கள் நம் கட்சியினர். நான் மறுத்து விட்டேன். ஆனால் அவர்களிடம் ஒன்று சொன்னேன். இப்படி இன்று எங்கள் கட்சி வளர்ந்து இருப்பதற்குக் காரணமானவர்களுக்குப் படம் வைப்பது என்றால் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும்தான் வைக்க வேண்டும். விருப்பம் என்றால் அவர்களின் படங்களை எங்கள் கட்சி அலுவலகத்தில் தொங்கவிடலாம் என்று கூறினேன்.'' - என்றார் கிண்டலாக கஜேந்திரகுமார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர் - சுமந்திரன் உட்பட.
அப்போது நான் ஒரு கொமெண்ட் அடித்தேன். அதைக் கேட்டு எல்லோரும் கெக்கட்டம் விட்டுச் சிரித்தனர் - சுமந்திரனும் கூட.
''ஓம். அவருக்கு (சுமந்திரனுக்கு) இனி அவரது கட்சி கூடப் படம் வைத்து மரியாதை செலுத்தாது. நீங்களாவது அதைச் செய்யுங்களேன்!'' - என்று கஜேந்திரகுமாரைப் பார்த்து விநயமாகக் கேட்டேன் நான்.
எல்லோரும் என் கொமெண்ட்டை Sportive ஆக எடுத்துக்கொண்டு சிரித்து, ருசித்து மறந்தார்கள். சுமந்திரனும்தான்.
நான் பகிடியாகச் சொன்னாலும் அதுதான் இன்று சுமந்திரனின் நிலைமை.
மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். - பழி ஓரிடம் பாவம் ஒரு இடம்...!
இந்த வழக்குகளுக்கு பின்னால் சுமந்திரன் இல்லை. யார் சூத்திரதாரி என்பது ஓரளவுக்கு மாவைக்கும் நன்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். அவர்களோடு எல்லாம் மாவை அடிக்கடி உரையாடிக் கொண்டுதான் இருக்கிறார். காலம் வரும்போது உண்மை வெளியாகும்...!