Thursday, October 8, 2026

வெளியாட்டு எதிரியை விட உள்நாட்டு எதிரியே ஆபத்தானவன் - அனுராதபுர பேரணியில் மஹிந்த


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் தனது மகனுமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் “ஜன சதன” (மக்கள் போராட்டம்) பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

பேரணியைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேரணி “தாய்நாட்டின் சுயமரியாதைக்கான மக்கள் போராட்டத்தின் தொடக்கம்” என அவர் வர்ணித்துள்ளார்.

இலங்கை தனது வரலாற்றில் பல்வேறு படையெடுப்புகள், எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் வீழ்ச்சிக் காலங்களை எதிர்கொண்ட போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, வரலாற்றில் இருந்து பெறப்பட்ட அந்தப் பாடங்கள் இன்றும் பொருத்தமானவை என தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டு எதிரி ஆபத்தானவர்”

ஒரு நாட்டிற்கு வெளிநாட்டு எதிரியை விட உள்நாட்டு எதிரியே அதிக ஆபத்தானவர் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, சுயநலத்திற்காக தமது நாட்டுக்கே துரோகம் இழைப்பவர்கள் ஆபத்தானவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், துரோகத்தை நியாயப்படுத்துபவர்களும் பொய்களைப் பரப்புபவர்களும் அதைவிட ஆபத்தானவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கலாசாரம், அடையாளம் மற்றும் தேசியப் பண்புகளைப் பாதுகாப்பதுடன், மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழலை மீண்டும் உருவாக்குவதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாது அனுராதபுர பேரணியில் கலந்துகொண்ட நீண்டகால அரசியல் கூட்டாளிகள், இளம் அரசியல்வாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் இருப்பதால் பேரணியில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத நிலையில், அவரது விவகாரம் அரசியல் ரீதியாக முக்கிய கவனம் பெற்றிருந்த சூழலில் இந்தப் பேரணி நடைபெற்றது.

இதனிடையே, விளக்கமறியலில் இருந்தவாறே நாமல் ராஜபக்ஷ பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.

அந்தச் செய்தியில், தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கருத்தொன்றை மேற்கோள் காட்டி, அனுராதபுரத்தில் திரண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களிடம் அவர் உரையாற்றியிருந்தார்.

you may also like