- by Editor
- 1 month ago
வருமான வரித் துறை வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்தார் விஜய்
‘புலி’ படத்தின் வருமானத்தை மறைத்தார் என வருமான வரித் துறை 1.50 கோடி இந்திய ரூபா அபராதம் விதித்த உத்தரவையும், இதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்யக் கோரி த.வெ.க. தலைவர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கடந்த 2015 - 16 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டின் வருமானம் 35.43 கோடி இந்திய ரூபா என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், விஜய் வீட்டில் வருமான வரித் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையின் அடிப்படையில், ‘புலி’ படத்துக்காக பெற்ற 15 கோடி இந்திய ரூபாவை வருமானத்தில் காட்டவில்லை என்று கூறி அவருக்கு 1.50 கோடி இந்திய ரூபா அபராதம் விதித்து கடந்த 2022 ஜூன் 30 ஆம் திகதி உத்தரவிட்டது.
வருமான வரித் துறையின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ''வருமானத்தை மறைத்தமைக்காக நடிகர் விஜய்க்கு 1.50 கோடி இந்திய ரூபா அபராதம் விதித்து வருமான வரித் துறை உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவிட்டுள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை'' என்று கூறி, விஜய்யின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
''வருமான வரித் துறை 1.50 கோடி இந்திய ரூபா அபராதம் விதித்து கால தாமதமாக உத்தரவிட்டுள்ளது. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவையும், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்.'' என்று அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.