Friday, October 9, 2026

முறையற்ற சிம் அட்டைகளால் அதிகரிக்கும் சட்டவிரோதச் செயல்கள் - TRCSL எச்சரிக்கை


முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சிம் அட்டைகள் விநியோகம் மற்றும் பதிவு தொடர்பில் புதிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக TRCSL பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சட்ட அமுலாக்க நிறுவனங்கள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர், புதிதாக சிம் அட்டைகளைப் பெறும் பயனாளர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் சிம் அட்டையைப் பதிவு செய்து பெற வேண்டிய நிலை ஏற்படும் என அவர் கூறினார். இந்த நடைமுறை பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2027ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களையும் உள்ளடக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் அடையாளத்தை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாட்டில் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை குறைப்பதே இந்த புதிய ஒழுங்குமுறைகளின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்த முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சேவை வழங்குநர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையிலேயே கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் நபர்களை மேலும் துல்லியமாக அடையாளம் காணக்கூடிய கட்டமைப்பு தற்போது தங்களிடம் இல்லை என்றும் TRCSL பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

you may also like