Sunday, October 11, 2026

பா.ஜ.கவிலிருந்து வெளியேற விரும்பினார்: அஜித் பவார் மரணம் பற்றி மம்தா சந்தேகம்


‘‘பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அஜித் பவார் விலக உள்ளார் என இரண்டு நாள்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.’’

- இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் நேற்று காலை 8.45 மணி அளவில் விமான விபத்தில் உயிரிழந்தார். சிறிய ரக விமானம் ஒன்றில் மும்பையில் இருந்து பாரமதி சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து மம்தா பானர்ஜி சந்தேகத்தை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

‘‘எதிர்க்கட்சிகளின் நிலை என்னாகுமோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆளும் கட்சியுடன்தான் (பா.ஜ.க.) இருந்தார். ஆனால், அஜித் பவார் பாஜக அணியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன்பு வேறொரு கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அறிக்கை அளித்ததாக நான் அறிந்தேன். இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் முறையான விசாணையை நான் கோருகிறேன். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. வேறு எந்த ஏஜென்சி மீதும் நம்பிக்கை இல்லை. அனைத்து ஏஜென்சிகளும் முழுமையாக சமரசம் செய்யப்பட்டுவிட்டன.

உண்மையில் இது ஒரு மிகப் பெரிய இழப்பு. இன்று அவர் பா,ஜ,க, அணியில் இருந்தார். ஆனால், நாளை அவர் தனது கட்சியின் உண்மையான இடத்துக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.  

you may also like