Friday, October 9, 2026

வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும்: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் உறுதி


"போர் காரணமாக வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும். அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படும். அபிவிருத்திகளின் நன்மைகள் வடக்கு - கிழக்கு மக்களுக்கும் வழங்கப்படும்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
"யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேசிய வைத்தியசாலையை வழங்குமாறு நீங்கள் அனைவரும் அரசிடம் கோரிக்கை விடுத்தீர்கள். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்குக் கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி வழங்கினோம். அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அப்போது கொழும்பில் மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சிறந்ததொரு வைத்தியசாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அத்தோடு நின்று விடாமல் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஏனைய பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நான் அடிக்கடி யாழ். மாவட்டத்துக்கு வருகை தருவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. உண்மையில் நான் இந்த முறை இங்கு வைத்தியசாலைகளை திறப்பதற்காக வந்தேன். நான் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையில் வந்துள்ளேன். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் கடந்த முறை இங்கு வருகை தந்தபோது, நெதர்லாந்துத் தூதுவர் இந்த இரண்டு புதிய மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இங்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் இந்த வார இறுதியில் இங்கு வந்து இந்தச் செயற்பாடுகளை நிறைவு செய்யத் தீர்மானித்தேன்.
யாழ்ப்பாணம் மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் போதியளவில் இல்லை. மக்கள் வேலைத் தேடும் நிலை காணப்படுகிறது. யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அநேகமான சாத்தியங்கள் உள்ளன.
யாழ். மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன.
எங்களால் இன்னும் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், காணாமல்போனோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகின்றேன்.
அதற்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதோடு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளேன்.." - என்றார்.

you may also like