- by Editor
- 2 years ago
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
யுத்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடைய தரப்பினரின் பொறுப்பு என தெரிவித்தார்.
அதற்கமைய, எந்தக் காணிகளை விடுவிக்க முடியும், எந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அத்தியாவசியமான காணிகளின் அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பில் இருந்து சிந்தித்து, விடுவிக்கக்கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறும் அவர் மேலும் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், மக்களிடம் காணிகளை மீளக் கையளிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதற்காக அதிக உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.