Friday, October 9, 2026

ரூபாயைக் காப்பாற்ற டொலர் கரைக்கப்படுகிறதா?:


சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்கை விட இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு நிலைமை தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த ஆண்டில் இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். எனினும், தற்போது சுமார் 6.5 பில்லியன் டொலர் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மாதாந்தம் 250 முதல் 300 மில்லியன் டொலர் வரை வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பது இலகுவான விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றபோது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6,100 மில்லியன் டொலராக காணப்பட்டதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்காக மூன்று காலாண்டுகளுக்கான நிதி ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் வெளிநாட்டு கையிருப்பு குறைந்தபட்சம் 7,100 மில்லியன் டொலராக அதிகரித்திருக்க வேண்டும். எனினும், தற்போது 6,591 மில்லியன் டொலர் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதனால், சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்ட இலக்கை விட நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ரூபாயின் மதிப்பைப் பாதுகாப்பதற்காக கையிருப்பில் உள்ள டொலர்கள் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு கையிருப்பைப் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதன் பொருளாதாரச் சுமை இறுதியில் அரசாங்கத்தின் மீதே விழும் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

you may also like