Thursday, October 8, 2026

ரணிலின் அதிரடி வியூகத்தால் மலர்கின்றது தேசிய அரசு?


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த வாரம் முதல் தெற்கு அரசியல் களத்தில் தரமான – சிறப்பான சம்பவங்கள் அரங்கேறும் என அறியமுடிகின்றது.

ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்களும் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியில் இணையத் திட்டமிட்டுள்ளார். ராஜித சேனாரத்னவும் ரணில் பக்கம் 'பல்டி' அடிக்கவுள்ளார்.

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு எதிர்வரும் 27 அல்லது 28 ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரையாற்றத் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்த உரையின் மூலம் எதிரணி உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பார் எனவும், அந்த அழைப்பையேற்றே ராஜித, பொன்சேகா மற்றும் மேலும் சில எம்.பிக்கள் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாவல்கள் இனிதே அரங்கேறிய பின்னர் அமைச்சரவையும் மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும், ராஜிதவுக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.


you may also like