- by Editor
- 7 months ago
உலகசாம்பியன்களுடன் இன்று மோதும் ருமேஷ் தரங்க
-
- by Editor,
- 3 weeks ago
- in விளையாட்டு செய்திகள்
உலகின் முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்கும் உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க இன்று (13) களமிறங்கவுள்ளார்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்துள்ள ருமேஷ் தரங்க, அண்மையில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
இந்நிலையில், ருமேஷ் தரங்கவுக்கு ஜெர்மனியின் முன்னணி வீரர் ஜூலியன் வெபர் கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெபர், ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் பதிவு செய்திருந்தார்.
அத்துடன், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட் உள்ளிட்ட உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களும் இன்றைய போட்டியில் பங்கேற்கின்றனர்.
உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள வீரர்கள் மற்றும் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் சாதித்த வீரர்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் இந்தத் தொடர் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமானது.
இன்று (13) தொடரின் இறுதி நாளாகும்.
இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடத்தைப் பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேலும், இரண்டாம் இடம் முதல் எட்டாம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், எட்டாம் இடத்தைப் பெறுபவருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.
உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள ருமேஷ் தரங்க, இன்றைய போட்டியில் இலங்கைக்காக மேலும் ஒரு முக்கிய வெற்றியைப் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.