- by Editor
- 2 years ago
யாழுக்கு மாத்திரமா தமிழ்ப் பொது வேட்பாளர்?
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
- புருஜோத்தமன் தங்கமயில் -
ஜனாதிபதித் தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களுக்காகk கட்டுப்பணம் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைப் பார்த்தால் முப்பது முதல் நாற்பது வரையிலான வேட்பாளர்களுக்குள் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டிய நிலை வரலாம்.
எனினும், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் வாக்குகளை ஓரணியில் திரட்டப் போகும் அந்த ஜனவசியமுள்ள வேட்பாளரைக் காண பலரும் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், பொதுக் கட்டமைப்பினரால்தான், இன்னமும் வேட்பாளர் ஒருவரை தேடிப் பிடிக்க முடியவில்லை. கட்டுப்பணம் செலுத்துவதற்கு இன்னமும் பதினொரு நாள்கள் மாத்திரமே இருக்கின்றன. அதற்குள் தமிழ்ப் பொது வேட்பாளர் கண்டுபிடிக்கப்படுவாரா என்பது மனதை படபடக்க வைக்கும் கேள்வி. ஆக, இப்படித்தான் இந்தப் பத்தியை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலை, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு பொது வாக்கெடுப்புக்கான களமாக கையாள வேண்டும். அதன்மூலம், சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் ஒருமித்த செய்தியை வழங்கலாம் என்பது, தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்தவர்களின் ஆரம்ப கால நிலைப்பாடு. இப்போது, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாக கைச்சத்திட்டுள்ளவர்களிடம் பொது வாக்கெடுப்பு, சர்வதேசத்துக்கு செய்தி சொல்லுதல் என்ற கோசங்கள் இல்லை. மாறாக, பிரிந்து செல்லும் தமிழ் வாக்குகளை ஒருங்கிணைத்தல் என்பது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. அரசியல் ஆருடங்களை கூறுதல், பத்திகளில் வகுப்பெடுத்தல் என்பதற்கும் செயற்பாட்டு அரசியலுக்கும் இடையில் பாரிய இடைவெளியுண்டு. இப்போது, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் பத்தியாளர்களும், இன்னும் சில சமூக செயற்பாட்டாளர்களும் கைச்சாத்திட்டிருந்தாலும், அந்தக் கட்டத்தை அடைவதற்கே அவர்கள் பெரும்பாடுபட்டாகிவிட்டது. தமிழ்த் தேசியப் பரப்பில் இன்று இயங்கும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தேர்தல் – வாக்கு அரசியலில் தங்கியிருப்பவர்கள். என்ன ஆனாலும் தேர்தல் வெற்றிதான் அவர்களின் முதல் இலக்கு. அதனை அவர்கள் கைவிடமாட்டார்கள். அப்படியான நிலையில், பொதுக் கட்டமைப்பு ஒன்றுக்குள் தேர்தல் ஆதாயங்கள் அற்ற செயற்திட்டத்துக்காக ஒன்றிணைதல் என்பது அவ்வளவு சாத்தியமில்லை. அதனை, பொது வேட்பாளர் விடயத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் பத்தியாளர்கள் இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை கண்டடைவது என்பது பெரும் சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பதாக, சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களில் பெரும் சினத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். யாரையாவது, ஒருவர் வேட்பாளராக முன்மொழிந்தால், அதனை மற்றவர்கள் எதிர்க்கிறார்கள். வேட்பாளராக முன்மொழியப்பட்டவர்களிடம் பேசினால், அவர்கள் விலகி ஓடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் வேட்பாளரைத் தேடும் படலம் தொடர்கிறது. மற்றறொரு பக்கம், பொது வேட்பாளர் எந்தக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார் என்பது சார்ந்தும் பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திட்டுள்ள கட்சிகளுக்குள் பிரச்சினையிருக்கின்றது. சில கட்சிகள் தங்களது சின்னத்தை தர மறுக்கின்றன. ஒரு கட்சி சின்னத்தை வழங்க முன்வந்தாலும், அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து சின்னத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு வருகிறார்கள் என்று மற்றக் கட்சித் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். இந்தக் குழப்பங்களினால், சுயேச்சை வேட்பாளராக யாரையாவது நிறுத்துவது தொடர்பிலும் பேசப்படுகிறது. அப்படியானால், அந்த வேட்பாளர் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாக வேண்டும். இப்போது, அப்படியானவர்களிடமும் பேச்சுவார்த்தைகளை பத்தியாளர்கள் நடத்துகிறார்கள். ஆனால், அதுவும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் சாத்தியமாகவில்லை. இறுதியாக, எம்.கே.சிவாஜிலிங்கத்திடம்தான் பொதுக் கட்டமைப்பினர் தஞ்சமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர், ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார்.
தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் விடயத்தின் பக்கத்தில் இல்லை. பொது வேட்பாளர் விடயத்தை கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குள் எடுத்துச் சென்றால், அதனை பெரும் பொல்லாப்பாக பார்ப்பவர்களே பெரும்பான்மையினர். மாவை சேனதிராஜா உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர யாரும் பொது வேட்பாளர் விடயத்தின் பக்கத்தில் இல்லை. ஏற்கனவே, பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவாக ஊடகங்களில் பேசிவந்த சிவஞானம் சிறீதரன், அதிலிருந்து விலகிவிட்டார். அவர், இப்போது, சமஷ்டி குறித்து பேசும் வேட்பாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவர்களுடன் பேசி, அதில் ஒருவருக்கு ஆதரவு வழங்கலாம் என்பது சிறீதரனின் தற்போதைய நிலை. இந்த நிலைப்பாடு நாளை எப்படி மாறும் என்பது தெளிவில்லை. கடந்த காலங்களில் அவரும் மைத்திரிபால சிறீசேன, சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு ஆதரவளித்திருக்கிறார். அவர்கள், ஒருபோதும் சமஷ்டி உத்தரவாதத்தை தமிழரசுக் கட்சியிடம் வழங்கியிருக்கவில்லை.
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான பொதுக் கட்டமைப்பில் இணைந்திருக்கின்ற கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளாக ரெலோவும், புளொட்டும் பொதுத் தேர்தல் தொடர்பில் பெரும் குழப்பத்தில் இருக்கின்றன. ரெலோவுக்குள் குருசாமி சுரேந்திரன் உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர யாரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்குச் சின்னத்தில் போட்டியிடுவதில் ஆர்வத்தோடு இல்லை. எப்படியாவது, பொதுத் தேர்தலுக்கு தமிழரசுக் கட்சியோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வீட்டுச் சின்னத்தில் தஞ்சமடைந்துவிட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இந்த நிலைப்பாடுதான் புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இருக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் இருவர், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தினை ‘முட்டாள்தனமானது’ என்று, தமிழரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும், பத்தியாளர்கள் சிலரிடத்திலும் கூறியிருக்கின்றார்கள். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை மறைந்த இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஏற்கனவே ‘முட்டாள்தனமானது’ என்று கூறியிருக்கிறார்கள். அதனை சில வர்த்தகர்கள் பெரும் விமர்சனமாக முன்வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, பொதுக் கட்டமைப்பில் உள்ள தலைவர்களே அதே நிலைப்பாட்டில் இருக்கிறர்கள் என்பதை யாராவது எடுத்துக் கூற வேண்டும். பொது வேட்பாளர் என்பது முட்டாள்தனமான நிலைப்பாடு என்ற உணர்நிலையில் இருப்பதால்தான், பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் கட்சித் சின்னத்தை பொது வேட்பாளருக்காக வழங்க தயங்குகிறார்கள். தங்களின் கட்சிச் சின்னத்தை பொது வேட்பாளருக்கு வழங்கி, சிலவேளை அவர் சில ஆயிரம் வாக்குகளைத்தான் பெற்றுவிட்டால், அது தங்களின் கட்சிக்கான பெரும் பின்னடைவாக மாறிவிடும் என்பது அவர்களின் பெரும் அச்சம்.
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டிருக்கின்ற ஊடகங்கள் மற்றும் ஒருசில புலம்பெயர் ஊடகங்களைத் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் உரையாடல் கட்டத்துக்கே வருவதில்லை. ஏனெனில், பொது வேட்பளர் விடயத்தினை முன்னெடுத்தவர்கள், அதனை யாழ்ப்பாணத்துக்குள்ளேயே பெரும்பாலும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான உரையாடல்களை ஒருபோதும் மக்களோடு அவர்கள் நிகழ்த்தவில்லை. அதிலும், அவர்கள் யாழ்ப்பாணத்தைத் தாண்டி பெரும்பாலும் வெளியில் வந்ததேயில்லை. ஒருசில தடவை வவுனியாவில் கூடிப் பேசினார்கள். மற்றப்படி, தமிழர் தாயகப் பிரதேசங்களின் எண்ணங்கள் தொடர்பில் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திட்டுள்ள கட்சித் தலைவர்கள், பத்தியாளர்களில் பெரும்பான்மையினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு கட்சித் தலைவரும் பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திடவில்லை. கைச்சாத்திட்டுள்ள ஏழு கட்சிகளில் ஆறு தலைவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மாத்திரமே மன்னாரைச் சேர்ந்தவர். பத்தியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பிலும் அதுவே நிலைமை. கைச்சாத்திட்டுள்ள பதின்நான்கு பேரில், நால்வர் மாத்திரமே கிழக்கைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மன்னார். மீதியுள்ள ஒன்பது பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இது, தமிழர் தாயகப் பிரதேசத்தின் ஒருங்கிணைவை கேள்விக்குள்ளாக்கும் நிலை. இது, பிரதேசவாதம் பேசும் அரச துணைக்குழுக்களுக்கும் உதிரிகளுக்கும் பலம் சேர்க்கும் நடவடிக்கையாகும்.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும் தொடர்ச்சியாக பிரதேசவாதத்தை தூண்டி தங்களின் அரசியல் இருப்பை தக்க வைக்க முயல்பவர்கள். தமிழ் அரசியலை யாழ்ப்பாண மேலாதிக்கம் கையாளுகின்றது, அதனால் கிழக்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர் குற்றச்சாட்டு. இந்தச் குற்றச்சாட்டில் பகுதியளவில் உண்மையும் இருக்கின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களில் அநேகமானவை, யாழ்ப்பாணத்துக்குள் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. இருப்பதில், தமிழரசுக் கட்சி மாத்திரமே வடக்கு கிழக்கு பூராவும் பரந்து பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது. தலைமைத்துவ சபை, மத்திய குழு என்று அனைத்துக் கட்டங்களிலும் வடக்கு கிழக்கிற்கான சரியான பிரதிநிதித்துவம் குறித்து குறிப்பிட்டளவு கவனத்தோடு இருந்து வருகின்றது. மற்றப்படி, சிவில் சமூக அமைப்புக்கள் என்ற பெயரில் செயற்பாட்டாலும், தோன்றி மறைந்த தமிழ் மக்கள் பேரவை ஆயினும், இப்போது உயிர்த்துள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆயினும் அதில், கிழக்கு மக்களின் குரல்களுக்கான இடம் வழங்கப்படுவதில்லை. அதனை விமர்சனமாக முன்வைத்தால், அதனை புறங்கையால் தள்ளும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். இவ்வாறான நிலைமையைத்தான், பிள்ளையானும் கருணாவும் அறுவடை செய்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், வடக்கு கிழக்கு பிரிப்பு என்பது நிர்வாக ரீதியில் மாத்திரமல்லாமல், தமிழ்த் தேசிய அரசியலுக்குள்ளும் நிகழ்ந்துவிடும்.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலான விடயம் பற்றி மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் இந்தக் பத்தியாளரிடம் கீழ்க் கண்டவாறு கூறினார். “...கிழக்கு மாகாணத்தின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில், தமிழ்த் தேசிய அரசியலில் தங்களை முக்கிய தரப்பினர் என்று கருதுபவர்கள் அக்கறை கொள்வதில்லை. கிழக்கின் மூன்று மாவட்டங்களும் சிங்கள ஆக்கிரமிப்பு மற்றும் நிர்வாக அத்துமீறல்களினால் நாளுக்கு நாள் தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழி வகைகள் குறித்து யாரும் சிந்திக்கிறார்கள் இல்லை. இந்த விடயத்தை முன்வைத்துத்தான், கிழக்கினை மீட்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அரச ஆதரவுக் கட்சிகளும், உதிரிக்குழுக்களும் கிழக்கில் அரசியல் செய்கின்றன. வாக்குகளைப் பிரிக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை யார் முன்னெடுக்கிறார்கள் என்று பாருங்கள், அவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்துக்குள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனை எல்லை, யாழைத் தாண்டவில்லை. கிழக்கில் ஒரு சிலரை ஒப்புக்காக பொதுக் கட்டமைப்பில் இணைத்திருக்கிறார்கள். அவர்களில் அநேகரை யாரென்றே மக்களுக்குத் தெரியாது. இதுதான் தற்போதுள்ள நிலை. இது தொடர்ந்தால், பிரதேசவாத அரசியல் மோசமான கட்டத்தை எட்டும். அது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்...” என்றார்.
தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையிழந்து, பிளவுண்டிருக்கின்ற மக்களை ஓரணியில் இணைக்கும் நோக்கோடு ஒரு செயற்பாட்டை முன்னெடுத்தால், அதன் அடிப்படைகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாக கூடியிருப்பவர்களின் ஆரம்பமே கோணலாக இருக்கின்றது. அங்குள்ள யாரும், ஒரு செயற்பாட்டின் ஆரோக்கியத்தன்மை தொடர்பில் சிந்திப்பதாகக் தெரியவில்லை. மாறாக, தனிப்பட்ட தன்முனைப்பு மனநிலைக்காக, தமிழ்த் தேசிய அரசியலைக் கையாள முயல்கிறார்கள். இது, உண்மையிலேயே தமிழ் மக்களை இன்னும் இன்னும் குழப்பகரமான கட்டத்துக்குள்ளும் பிளவுக்குள்ளும் தள்ளும். திறந்த மனதோடும் வெளிப்படையான உரையாடலோடும் செய்யப்படாத விடுதலை அரசியல் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனெனில், அந்த செயற்பாடுகளுக்குப் பின்னால், வேறு சக்திகளின் நீளும் கரங்கள் இருக்கலாம். இப்போது, தமிழ் மக்கள் அந்தக் கரங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் குழப்பங்களினால் சில தரப்பினர் தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பையே காணாமல் ஆக்கிவிடுவார்கள்.