Friday, October 9, 2026

மனுஷவின் வெற்றிடத்துக்கு பந்துல லால் பண்டாரிகொட


உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

அதேவேளை, வெற்றிடமாகியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்துரையாடல்களை நடத்தித் தீர்மானிக்கும் என்று ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

அரசு பக்கம் தாவிய அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரைக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.

மனுஷ நாணயக்கார தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதுடன், ஹரின் பெர்னாண்டோ தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may also like