Thursday, October 8, 2026

போதகர் ஜெரோம் நேற்று 8 மணி நேரம் சி.ஐ.டியால் விசாரணை! இன்றும் தொடர்கிறது!!


மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகி சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக இன்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று முற்பகல் 9.20 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். அவர் மாலை 5 மணியளவில் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

ஜெரோம் பெர்ணான்டோ நாடு திரும்பும் போது அவரைக் கைது செய்ய வேண்டாம் எனவும், அவர் இலங்கை வந்ததும் 48 மணி நேரத்துக்குள் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறும் சி.ஐ.டிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, வெளிநாட்டில் தங்கியிருந்த மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்றுமுன்தினம் காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கொழும்பில் கடந்த மே மாதம் வழங்கிய போதனையின் போது, பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

..................

you may also like