Sunday, October 4, 2026

த.வெ.க. வேட்பாளர் குறித்து உருவகேலி; மு.க. ஸ்டாலின் மீது முறைப்பாடு பதிவு


தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துகள் சத்யபாமாவின் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் அமைந்ததாக த.வெ.க. தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்கு த.வெ.க. தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மு.க.ஸ்டாலினின் பேச்சு தொடர்பில் த.வெ.க. வழக்கறிஞர் அணியினர் தேர்தல் ஆணையம், பொலிஸ் தலைமைப் பணிப்பாளர் அலுவலகம், சென்னை போலிஸ் ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புகாரில், சத்யபாமா தொடர்பாக மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் உருவகேலி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக த.வெ.க. தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக த.வெ.க. தரப்பினரின் எதிர்ப்புகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


you may also like