Sunday, October 4, 2026

அ.தி.மு.க. வழிநடத்தல் ஜெயலலிதாவின் கொள்கைகள் ஸ்டாலினிடம் – ஓ.பன்னீர்செல்வம் கருத்து


கருணாநிதியின் ஞானமும் ஜெயலலிதாவின் வேகமும் ஸ்டாலினிடம் உள்ளன என்று தி.மு.கவுடன் ஆதரவாளர்களை எணைக்கும் மதுரை விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தி.மு.கவில் இணையும் விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். இவ்விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகையில்,

“என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும், கொடுத்த பணிக்கு மனசாட்சியாகவும் நன்றியுடன் பணியாற்றி வந்துள்ளேன். நான் இருந்த இயக்கத்தில் எனக்கென்று ஒரு தனி அணியை உருவாக்க எண்ணியதில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு என் கடமையை ஆற்றி வந்திருக்கிறேன்.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. இன்று, அதிமுகவாக இல்லை. தொண்டர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற திருத்தக்கூடாத கட்சி விதிகளை திருத்தனர். தொண்டர்கள் உரிமைகள் பறித்தனர். ஜெயலலிதா வழிநடத்திய, வளர்த்த அ.தி.மு.க. இன்று இல்லை. தனக்கான, தனது பதவியை மட்டுமே குறியாக கொண்ட ஒருவரின் சுயநல அரசியலால் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று அபகரிப்பு தி.மு.கவாக மாறிவிட்டது.

பெரியாரின் திராவிட சிந்தாந்ததிற்கு எதிராகவும், அண்ணாவின் சமூக நீதிக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க சட்டப் போராட்டங்களை நடத்தினேன். தலைமைக்கு உண்மையாக உழைத்திற்கும், விசுவாசமாக நடந்து கொண்டதிற்காகவும் குறுக்கு வழியில் வந்தவர்களால் நான் எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி பழிவாங்கப்பட்ட என்னை, முதல்வர் ஸ்டாலின் அன்போடு அழைத்து பண்போடு பாசம் காட்டி, ஜெயலலிதாவின் அரவணைப்பை எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் வழங்கியுள்ளார்.

சட்டத்தை வளைத்து, திட்டம் போடலாம். கட்சி விதிகளை மாற்றி வட்டமும் போடலாம். தொண்டர்கள் உரிமைகளை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம். கட்சியை கைப்பற்றலாம். ஆனால், வெற்றிபெற முடியுமா என்றால் இல்லை. தொடர் தோல்விதான் தொடர்கதையாக இருக்கிறது. இனியும், அவர்கள் தோல்வி தொடர்ந்து கொண்டு இருக்கும்.'' என்று தெரிவித்தார்.

you may also like