Saturday, October 10, 2026

பொருளாதார மாற்றத்திற்காக ஒன்றிணையுங்கள் என எதிர்க் கட்சிக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு



பொருளாதார மாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், மஹா கனதராவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இந்த குடிநீர் திட்டத்திற்கு 11,515 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 5166 மில்லியன் கடன் நிவாரணம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

" 2022 ஆம் ஆண்டில் நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வராத காரணத்தினால் நான் பொறுப்பேற்றுக்கொண்டமையை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதன் பிறகு பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்னெடுத்தோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான் நாம் இந்த திட்டத்தையும் ஆரம்பித்தோம்.

அன்று அதிகமானவர்கள் எங்களுடன் இருக்கவில்லை. சிலர் நாடாளுமன்றத்தை கலைக்கச் சொன்னார்கள்.

அப்போது விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இல்லை. எரிபொருள் இல்லை. இவ்வாறான நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது, முதலில் இப்பிரச்சினைகளைத் தீர்த்து உரிய காலத்தில் தேர்தலை நடத்த விரும்பினோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இதுவரை பல பணிகளைச் செய்துள்ளோம். ஆனால் நாம் இன்னும் கடன் சுமையில் இருந்து விடுபடவில்லை. கடன் தொடர்பில் ஓரளவு சலுகை கிடைத்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்த மேலும் 20 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவான பொருளாதார மாற்றத்தை நாம் ஏற்படுத்தாவிட்டால், அந்த கடன்களை செலுத்த மேலும் அதிகளவான கடன்களைப் பெற வேண்டியிருக்கும்.

நாம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது மக்களுக்குத் தேவையான உணவு இருக்கவில்லை. எரிபொருள் இல்லை.

இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதே முதலில் செய்ய வேண்டிய விடயம். யுத்த காலங்களில், அரசாங்கங்கள் வீழ்ச்சியடையும் போது, எந்தவொரு அரசாங்கமும் முதலில் செய்ய வேண்டியது இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும்.

நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கே நாம் முதலில் நடவடிக்கை எடுத்தோம். இன்று நாட்டில் ஸ்திரத்தன்மை உள்ளது. மேலும் சட்டம், ஒழுங்கு பேணப்படுகின்றது. அரசை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பேரணிகளை நடத்தலாம். அந்த ஸ்திரத்தன்மை இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலைகளை நாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுற்றுலா வர்தகம் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். உணவு வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இன்னும் 5 – 6 வருடங்கள் நாம் இவ்வாறு காத்திருக்க முடியாது. நாம் விரையில் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொண்டு அதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார மாற்றத்துக்கான செயற்பாடுகளுக்கான புதிய சட்டத்தை கெண்டு வர நாம் எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

தேர்தல் காலத்தில் நாம் தனிப்பட்ட அரசியல் செயற்பாடுகளை வெவ்வேறாக முன்னெடுப்போம். தேர்தலின் பின்னர் ஒற்றுமையாகச் செயற்படுவோம். அவ்வாறான முறைமையிலேயே நாம் செயற்பட வேண்டும். நாம் பிரிந்திருந்தால் கிராம மக்களுக்கு எந்த நலனும் கிடைக்காது. இன்றும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம் என்றே கூறுகிறேன். அரசாங்கத்திற்காகவும் எதிர்கட்சிக்காகவும் ஒன்றுபடுங்கள் என்று கூறவில்லை. மக்களுக்காக ஒன்றுபடுவோம் என்றே அழைக்கிறேன். அனைவரும் ஒன்றுபடுவதால் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்."- என்றார்.


you may also like