Saturday, October 10, 2026

நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் உதவி டிசம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு


சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்துக்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் குறுகிய கால இலாப நோக்கமின்றி வீழ்ச்சியடைந்த தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

நாம் குறித்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமையே இந்த அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று எதிர்தரப்பினர் கூறினர். அவ்வாறு செல்லும்போது முக்கியமாக அவர்கள் இடும் நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும்.

நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்லுங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று கடந்த அரசு பாரிய அளவில் வரி விலக்குகளை வழங்கியமையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் எதிர்த் தரப்பினர் கூறுகின்றனர். அப்படியென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு வரி அதிகரிக்கப்படும் போதும் அதற்கு எதிராகக் கோஷங்களை எழுப்புகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவேறு முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையும் மிக விரைவில் எமக்கு கிடைக்கவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அது எமக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் எமக்கு கிடைக்கும் தொகையை விட அதன் ஊடாக ஏனைய கடன் வழங்குனர்களுக்கு எம்மீது எற்படும் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம். அந்த நம்பிக்கையின் மூலம் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டுக்கு மீண்டும் அபிவிருத்திப் பணிகளுக்காக கடன் வழங்க முன்வருவதுடன் முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளைச் செய்யவும் முன்வருவார்கள். எமது கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு நாட்டில் தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க முடியும்.

நட்டத்தில் இயங்கிவந்த பல்வேறு அரச நிறுவனங்கள் இலாபமீட்டும் நிலைக்கு வந்துள்ளமை, தற்போது நாம் முன்னெடுக்கும் பொருளாதார வேலத்திட்டங்கள் வெற்றியடைந்து வருவதை எடுத்துக்காட்டும் ஒரு விடயமாகக் குறிப்பிடலாம். மேலும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட்டி வீதங்கள் குறைந்துள்ளன. அந்நியச் செலாவணிக் கையிருப்பு உயர்வடைந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் தற்போது இல்லை. நாம் தற்போது பாரிய சவால்களை எதிர்கொண்டு அதில் இருந்து மீள்வதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்." - என்றார். 

you may also like