Thursday, October 8, 2026

சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.கவுடன் ராமதாஸ் கைகோத்த மர்மம் என்ன?: ஸ்டாலின் கேள்வி


"சமூக நீதி பேசும் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.கவுடன் கைகோத்த மர்மம் என்ன? பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக் கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. இது, மூத்த தலைவரான உங்களுக்குத் தெரியாதா?"

- இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

"இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும் என்றால், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும் என்றால், எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும் என்றால், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் இந்திய தேசியக் கொடி கம்பீரமாக டெல்லி செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால், முதலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இண்டியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

பா.ஜ.க. என்பது சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி. சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. நம்முடைய நாட்டை மத, இன, சாதி, மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. அப்படிப்பட்ட, பா.ஜ.கவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு. ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூக நீதி பேசும் வைத்தியர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்.

சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.கவுடன் சமூகநீதி பேசும் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை இரகசியமெல்லாம் கிடையாது. இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை.

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூக நீதியைக் காப்பாற்றும் அரசை மத்தியில் அமைக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணியை வலுவாக அமைத்திருக்கிறோம். அந்த வகையில், இண்டியா கூட்டணி, மக்களின் நலனுக்காக, மக்களுக்காகவே பாடுபடும் கட்சிகளின் கூட்டணியாக கம்பீரமாக உங்களுக்காகக் களத்தில் போராடுகிறோம்." - என்றார்.

you may also like