- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (02.04.2024)
தேர்தல்கள் நெருங்கும் சமயத்தில், தேர்தல் செலவினத்துக்கு நிதி திரட்டும் வாய்ப்பு என்ற பெயரில் ஒரு பிஸினஸ் கொடிகட்டிப் பறப்பதாகப் பேச்சடிபடுகின்றது.
மதுபானச் சாலைகளை திறப்பதற்கான உரிமங்கள் அரசியல்வாதிகள், அவர்களூடாக ஆதரவாளர்கள் என்று பலருக்கும் அள்ளி வீசப்படுகின்றன.
நிதி அமைச்சரான ஜனாதிபதியின் தாராள மனப்பான்மை பலருக்கும் கஜானாவை நிரப்பி வருவதாகத் தகவல்.
பல இடங்களில் சில மில்லியனுக்குப் போன ரேட், சில இடங்களில் கோடியை எட்டி இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் உண்டு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கடைசியில் உயர்நீதிமன்றத்திடம் முறையீடு செய்திருக்கின்றார்கள் - அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வடிவத்தில்.
உயர்நீதிமன்றமும் விடயத்தின் முக்கியத்துவத்தையும் ஆழத்தையும் புரிந்து இருப்பதாகத் தெரிகின்றது. பொது அமைப்பின் பிரதிநிதிகளான மனுதாரர்களை விட, உயர் நீதிமன்றம் இது விடயத்தில் அதிக கரிசனை கொண்டிருப்பதாக சம்பந்தப்பட்ட சட்டத்தரணி ஒருவர் கூறினார்.
மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பூர்வாங்க விசாரணைகளைக் கடந்த வாரம் நடத்திய உயர் நீதிமன்றம் விடயத்தை நீண்ட காலம் ஒத்திவைக்க விடவில்லை. இன்று பிற்பகல் 1:30 மணிக்கு விசேடமாக மன்று கூடுகின்றது - இவ்விடயத்தை ஆராய்ந்து முடிவு எடுப்பதற்காக.
நீதியரசர் யஸந்த கோட்டாகொட, ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரைக் கொண்ட ஆயமே இந்த விடயத்தை ஆராய்கின்றது. துணிச்சலான தீர்ப்புகளை தந்த நீதியரசர்களைக் கொண்ட குழாம் இது.
வரும் வெள்ளிக்கிழமையுடன் புதுவருடத்தை ஒட்டி, உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. அதற்கு முன்னர், இப்படிக் கண்மூடித்தனமாக மதுபானசாலை உரிமங்களை அள்ளி வீசித் தானம் நடத்தும் அரசியல் தலைமைகளுக்கு ஒரு குட்டு வைக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரவு இடைக்காலத் தடை வடிவத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அடுத்து வரும் நாள்களில் விடயம் தெளிவாகும். பார்த்திருப்போம்.