Sunday, October 4, 2026

பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பேரூந்துகள் சேவையில்


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பில் இருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றைய தினமும் (13) தேவைக்கேற்ப கூடுதல் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நேற்று (12) மாலை முதல் குறைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில், வழக்கமான பேரூந்து அட்டவணைக்கு மேலாக 1,500 பேரூந்துகள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இன்றும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப போதுமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாளை உறவினர் வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்காக பிராந்திய போக்குவரத்து சபைகள் மூலம் தேவையான பேரூந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இன்றும் நாளையும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க கூறினார்.

அத்துடன், கட்டுப்பாடுகள் இருந்தாலும் கொழும்பிலிருந்து இயக்கப்படும் அனைத்து அதிவேக ரயில்கள், தபால் ரயில்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான அதிவேக ரயில்கள் வழமையானபடி சேவையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல, கொஸ்கம, அவிசாவளை, புத்தளம் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இருந்து அவசிய பணிகளுக்காக கொழும்பு வரும் மக்களுக்காக சிறப்பு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவை மீண்டும் அந்தந்த பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

you may also like