Thursday, October 8, 2026

பெற்ற தாயை அடித்து கொலைசெய்த மகன்


கம்பளையில் மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர் எனவும் அவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்கின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனது 8 வயது மகளுடன் கொலை இடம்பெற வீட்டில் வசித்து வருகின்றார். நோய்வாய்ப்பட்ட அவரது தாயாரும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கம்பளைக்கு வந்தபோது சந்தேகநபரான மகனிடம் மருந்து எடுத்து வருமாறு தாய் கூறியுள்ளார்.

ஆனால் அவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது மருந்து கொண்டு வரவில்லை என்று தாய் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மகன் ஆத்திரமடைந்து தாயைத் தாக்கியுள்ளார்.

தனது தந்தை தனது பாட்டியை இரும்புக் கம்பியால் தாக்கினார் என்று சந்தேகநபரின் 8 வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். எனினும் தாயை நாற்காலியால் தான் தாக்கினார் என்று பொலிஸாரிடம் சிக்கியுள்ள சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் கடினமான பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு அருகில் வேறு வீடுகள் எதுவும் இல்லாததால் தாக்கப்பட்ட தாய் மறுநாள் (நேற்று) காலை வரை வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை மற்றொரு மகன் தாயைக் கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் உயிரிழந்தார்.

இதையடுத்துத் தலைமறைவாகியிருந்த மகன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

you may also like