- by Editor
- 1 year ago
பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கட்டிடக் கூரை இடிந்து விழுந்த விபத்து - 14 சிறுவர்கள் உயிரிழப்பு
-
- by Editor,
- 3 months ago
- in உலக செய்திகள்
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு நிலையம் ஒன்றின் கட்டிடக் கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கட்டிடத்தின் கூரை நீண்டகாலமாக பலவீனமான நிலையில் இருந்ததாகவும், சிறுவர்கள் வகுப்பில் இருந்தபோதே கூரையின் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூரையின் மீது ஏற்றப்பட்டிருந்த அதிகப்படியான பாரம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உத்தியோகபூர்வ விசாரணை நிறைவடைந்த பின்னரே விபத்திற்கான துல்லியமான காரணம் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சைகளை தாமதமின்றி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனிடையே, பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகுந்த வேதனையளிக்கும் பேரவலம் எனக் குறிப்பிட்டதுடன், இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.