- by Editor
- 2 years ago
பதுளை–நானுஓயா மலையக ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன.
'டித்வா' சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதை, ரயில்வே திணைக்களத்தின் சீரமைப்பு பணிகளின் பின்னர் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி, நானுஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் தனுஷ்கா ஆகியோரின் தலைமையில், சமய வழிபாடுகளுடன் சேவை ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
நானுஓயா முதல் பதுளை வரையிலான 85 கிலோமீற்றர் தூரத்தை ரயிலில் பயணிக்க சுமார் 3 மணி 15 நிமிடங்கள் ஆகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாதை சேதமடைந்த காரணத்தால் சேவைகள் அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 23 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளின் பின்னர் முழுமையான மீளமைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இன்று முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினமும் நான்கு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் கொழும்பிலிருந்து பதுளை வரை முழுமையான ரயில் சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.