- by Editor
- 2 years ago
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டார் முதல்வர் விஜய்
-
- by Editor,
- 1 week ago
- in இந்திய செய்திகள்
தமிழகத்தின் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிட்ட அரசாணையை முதல்வர் ஜோசப் விஜய் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடற்தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் திட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக தலைமைச் செயலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு அறிவித்திருந்தது. 1,200 கோடி இந்திய ரூபா செலவில் 25.55 ஏக்கர் பரப்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள கடற்கரையை முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும் மீன் வலைகளை உலர்த்தவும் பயன்படுத்திவருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என மீனவர்கள் போராடி வருகின்றனர்.
2004 இல் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பகுதியிலேயே தலைமைச் செயலகம் அமைக்கப்பட இருப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இத்தகைய காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த அரசாணை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் வேறு இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை இடைநிறுத்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பட்டினப்பாக்கம் திட்டத்தை இடைநிறுத்த செய்ய பொதுத்துறை செயலாளருக்கு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார் எனவும் தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடம் குறித்த விவரத்துடன், புதிய அரசாணை வெளியிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.