Monday, October 12, 2026

நேபாள வெள்ளத்தில் மாயமானவர்களா? இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு


நேபாளத்தை தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் சடலங்கள் இந்திய நதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

நேபாளத்தின் தெற்குப் பகுதியில், சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கின் காரணமாக சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் யாருடையவை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவில் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியம் முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் மீட்கப்பட்டுள்ள ஏழு சடலங்களும் இதுவரை நேபாளத்தின் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

you may also like