Sunday, October 11, 2026

நாங்கள் சாதித்துவிட்டோம்: சி.ஜே.பி. நிறுவனர் உற்சாகம்


''நாம் சாதித்துவிட்டோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார்.” என்று சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் தீப்கே மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 20 ஆம் திகதி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சி.ஜே.பியினர் பேரணியாகச் சென்றனர். பேரணிக்கு பொலிஸ் அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. அப்போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் பலர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தப் போராட்டத்தை அடுத்து, சி.ஜே.பி பிரதிநிதிகளைச் சந்திக்க மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதையேற்று, சி.ஜே.பியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தனர்.

அப்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி இந்திய ரூபா இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பேச்சவார்த்தை நடைபெற்றது. அப்போது, கடைசி இரண்டு கோரிக்கைகள் கொள்கை அளவில் ஏற்கப்படும் என்றும் முதல் கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் நட்டா தெரிவித்தார்.

இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது இராஜினமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்று அனுப்பியுள்ளார். மேலும், தனது இராஜினாமாவுக்கான காரணம் குறித்த அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதான் இராஜினமாவை அடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இசை இசைத்தும், நடனமாடியும் அவர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

தர்மேந்திர பிரதான் இராஜினாமா குறித்துப் பேசிய சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் தீப்கே, “நாம் சாதித்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்துவிட்டார். நீங்கள் அச்சப்படாவிட்டால், அரசின் முன்பாக தலை குனியாவிட்டால் எவரையும் இராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது.

இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. அமைதியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. அமைதியான முறையில் போராடினால் அது வீணாகாது. கரப்பான்பூச்சிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது.” என தெரிவித்துள்ளார்.


you may also like