Friday, October 9, 2026

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்


தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு 400 பேர் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

எனினும், இதனை சட்டமாக மாற்றுவதற்கு செனட் சபையின் அங்கீகாரம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அங்கீகாரம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடாக தாய்லாந்து மாறவுள்ளது. இந்த சட்டத்தின்படி, திருமணமான ஒரே பாலினத்தவர்களும் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியும்.

எவ்வாறாயினும், தந்தை மற்றும் தாய் ஆகியோருக்கு பதிலாக பெற்றோர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கான பரிந்துரையை கீழ் சபை நிராகரித்துள்ளது.

தாய்லாந்தில் ஏற்கனவே பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை மீதான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்கள் உள்ளன.

இந்த நிலையில், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்காக கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, இதற்கான சட்டமூலத்தை கொண்டுவருவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கடந்த வருடம் நடத்திய கணக்கெடுப்பில், 96.6 சதவீதமானோர் ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தாய்லாந்தின் மாற்று பாலினத்தவர்கள் அதிகம் இருந்தாலும், அவர்கள் தன்பாலின அடையாளத்தை மாற்ற அனுமதிக்கும் முன்மொழிவுகளை தாய்லாந்து நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், தன்பாலின திருமணம் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடாக தாய்வான் 2019 ஆம் ஆண்டு இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.


you may also like