Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (03.05.2024)


விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற பேச்சுக்களின் போது அனுசரணைப் பணி வகித்த நாடு நோர்வே.

ரணிலின் அரசின் காலத்தில் நான்கு நாடுகளில் ஆறு சுற்றுப் பேச்சுக்கள், பின்னர் மஹிந்தர் காலத்தில் ஜெனிவாவில் இரண்டு சுற்று பேச்சுக்கள் என்று சமரச முயற்சிகளில் அங்கங்கு பெரும் செலவில் பேச்சுகளை ஒழுங்குபடுத்திய நோர்வே இப்போது கொழும்பில் அதன் தூதரகத்தையே மூடிவிட்டது. புதுடில்லியில் இருக்கும் நோர்வேத் தூதரகமே அங்கிருந்தபடி இலங்கை விடயங்களையும் கையாளுகின்றது.

நோர்வேயின் இந்தியாவுக்கான தூதுவர் திருமதி மே எலின் ஸ்ரெனர் மற்றும் இரண்டாவது செயலாளர் ஜொஹான் பெர்ஜ்கம் ஆகியோர் கொழும்பு வந்துள்ளனர் - இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காக.

இருவருமே ஜனாதிபதி தேர்தலின் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் தனித்தனியாக விருந்துண்டு சந்தித்து விரிவாக உரையாடி உள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸநாயக்க மூவரையும் சந்தித்த அவர்கள், மூன்று பேருமே தத்தமது வெற்றி உறுதி என்று மிகத் திடமாக நம்புகின்றனர் எனக் கூறுகின்றனர்.

நோர்வே தூதுவரும் செயலாளரும், திங்களன்று யாழ் வருகின்றார்கள். இங்குள்ள பலரையும் சந்திக்க இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர்கள் மூன்று பேருமே தத்தமது வெற்றி குறித்து அதீத நம்பிக்கையில் இருக்கின்றார்கள். அது கடும் போட்டி நிலவுகின்றது என்பதன் எடுத்துக்காட்டு. இந்தப் போட்டியை சிறுபான்மை இனத்தவர்கள் தங்களுக்குச் சாதகமாக - தந்ரோபாயமாக - புத்திசாலித்தனமாக - பயன்படுத்த வேண்டும் என்பது நோர்வேப் பிரதிநிதி உட்பட மேற்குலகத்தவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், தமிழர்களாகிய எங்கள் பக்கத்தில் குறிப்பிடத்தக்க தலைவர்கள் பொது வேட்பாளர் என்ற காய் நகர்த்தலில் இந்தச் சந்தர்ப்பத்தை நிராகரிக்க போகின்றார்கள் என்பதை தமது யாழ். விஜயத்தில் அவர்கள் உணரும்போது, எங்களின் அரசியல் மேதாவித்தனத்தை கண்டு திகைத்துத்தான் போவார்கள் என்பது நிச்சயம். இருந்து பாருங்கள்...!


you may also like