- by Editor
- 2 years ago
மட்டு. தரவை மாவீரர் நினைவேந்தலில் கைதான நால்வருக்கும் மறியல் நீடிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மட்டக்களப்பு, தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்டமை தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள், ஒலி பெருக்கி என்பவற்றைக் கழற்றி வாகனத்தில் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு திரும்பினர்.
இதன்போது சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான நிதர்சன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி காஞ்சிநிதி, ஒலிபெருக்கி உரிமையாளரான 43 வயதுடைய பிரான்சிஸ் அன்ரனி நியூட்டன், அவரது மகனான 19 வயதுடைய நியூட்டன் சதுர்சன், வாகன சாரதியான 33 வயதுடைய சண்முகநாதன் நவஜீவன் ஆகிய 4 பேரையும் தடைசெய்யப்பட்ட புலிகளின் பாடல் ஒலிபரப்பு செய்தமை, பெயர் பொறித்த பதாகை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் நவம்பர் 28 ஆம் திகதி வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை டிசம்பர் 4ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை அவர்கள் நால்வரையும் மீளவும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.