Friday, October 9, 2026

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம்


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் தங்கச்சிமடத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆகிய இரு திகதிகளில் கடற்தொழிலில் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டனர் என 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இலங்கை நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர்கள் நேரடியாக முன்னிலையாகி விடுதலையான விசைப்படகுகளை மீட்பதற்கு மீட்பு குழு இலங்கை செல்வதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரம்பரிய பகுதியான கச்சத்தீவு பகுதியில் தமிழக கடற்தொழிலாளர்களின் உரிமையை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடம் யாகப்பா பேருந்து நிலையத்தில் கடற்தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தனர். இன்று மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழக கடற்தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கை கண்டித்தும், கடற்தொழிலாளர்கள் கைது நடவடிக்கை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கடற்தொழிலாளர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்கள் மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட கடலுக்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


you may also like