Saturday, October 10, 2026

ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் முற்றாகப் பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு: கஜேந்திரகுமார் எம்.பி. வலியுறுத்து


"தமிழர்களின் அரசியல் உரிமையை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ்த் தரப்புகள்தான் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரி வருகின்றன. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல், அதனை முழுமையாகப் பகிஷ்கரிப்பதே தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு."

- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கதை தமிழ் அரசியல் களத்தில் ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.

அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களைக் கூட முன்மொழிந்திருக்கின்றார்கள். குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தானாகவே முன்வந்து, அனைத்துக் கட்சிகளும் இணங்கி தனது பெயரை முன்மொழிந்தால் அதனைப் பரிசீலிப்பதற்குத் தயார் என்று கூறியிருக்கின்றார்.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கருத்தையும், மனோ கணேசனைப் பொதுவேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகங்கள் இது பற்றிய எமது நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாகக் கோரி வரும் நிலையில், அதனை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடியது ஏதேனுமொரு சிங்களத் தரப்பே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நினைக்கின்றேன்.

 இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தல் என்ற ஒரேயொரு தீர்வுதான் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இதனை நாம் பல வருடகாலமாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இருப்பினும் துரதிஷ்டவசமாக தமிழ்மக்கள் அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், ஒவ்வொரு முறையும் போலியான கதைகளை நம்பி வாக்குகளை வழங்கி, ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். எனவே, இம்முறை தமிழ் மக்கள் நன்கு சிந்தித்துத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்." - என்றார். 

you may also like