Thursday, October 8, 2026

சுரேஷ் சலே விவகாரம் - குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேயின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுக்கு அருகில் இருந்த ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் தகவல்கள் மற்றும் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சுரேஷ் சலேயின் உடல்நிலை மற்றும் தற்போதைய நிலைமை குறித்து அறிந்துகொள்வதற்காக, நேற்று (08) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் CID அதிகாரிகள் கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், குறிப்பிட்ட தினத்தில் தங்களால் ஆஜராக முடியாது எனத் தெரிவித்து, மாற்று திகதியை அவர்கள் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, குறித்த விசாரணைகளுக்குப் பொறுப்பான அதிகாரி உள்ளிட்ட CID அதிகாரிகள் குழுவொன்றை இந்த வாரத்திற்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.சுரேஷ் சலே தொடர்பான கைது, தடுத்துவைப்பு மற்றும் அவரது உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

you may also like